இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26-11-2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவர், ஹபீஸ் சயீத்.
லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த ஜனவரி மாதம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அத்துடன் அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஹபீஸ் சயீத் மீதான பாகிஸ்தான் அரசின் பிடி மேலும் இறுகி உள்ளது. அவர் தீவிரவாதிதான் என பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது பெயர் தற்போது தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
அவரது நெருங்கிய கூட்டாளிகளான காஜி காசிப், பைசாலாபாத்தை சேர்ந்த அப்துல்லா ஒபைது, முரித்கேயை சேர்ந்த ஜாபர் இக்பால், அப்துர் ரகுமான் ஆகிய நால்வரது பெயர்களும் பயங்கரவாத தடை சட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாண அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.
பாகிஸ்தான் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி ஹபீஸ் சயீத், காஜி காசிப், அப்துல்லா ஒபைது, ஜாபர் இக்பால், அப்துர் ரகுமான் ஆகிய மொத்தம் 1,450 பேர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களில் ஹபீஸ் சயீத் உள்பட 37 பேர் வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 1997-ம் ஆண்டு இயற்றப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் மூலமாக தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்கீழ், ஜமாத் உத் தாவா தலைவர் ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கைது செய்து மூன்றுமாத வீட்டுச்சிறைக் காவலில் அடைத்தது. கடந்த ஏப்ரல் மாதம் வீட்டுச்சிறைக் காவலை மேலும் மூன்று மாதம் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவு கடந்த 27-ம் தேதிஉடன் காலாவதியானது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் உத்தரவின்படி, பஞ்சாப் மாகாணத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையீல் ஹபீஸ் சயீதின் வீட்டுச் சிறைக்காவல் ஜூலை 28-ம் தேதியில் இருந்து மேலும் இரு மாதங்களுக்கு (செப்டம்பர் மாதம் வரை) நீட்டிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதி ஹபீஸ் சயீத் மற்றும் மேலும் நான்குபேரை வீட்டுக்காவலில் அடைத்து வைத்திருக்கும் அரசின் முடிவை எதிர்த்து லாகூர் ஐகோர்ட்டில் முன்னர் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஹபீஸ் சயீதின் வீட்டுக்காவல் தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேதி குறிப்பிடாமல் அந்த தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக லாகூர் ஐகோர்ட் இன்று அறிவித்துள்ளது.