செய்திகள்

த.மா.கா. தனித்தன்மையுடன் செயல்படுகிறது; தேர்தல் நேரத்தில் கூட்டணி- ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தனித்தன்மையுடன் செயல்படுகிறது. தேர்தல் நெருங்கும்போது மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒத்த கட்சிகளுடன் கூட்டணி சேர கூடிய நிலை ஏற்படலாம் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மாலை மலர்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியாத்தம் பகுதியில் கைத்தறி, விசைத்தறி, தீப்பெட்டி, பீடி தொழிலை காப்பாற்ற ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகள் முழுமையான வசதிகளுடன் இல்லை, போதிய டாக்டர்களும் இல்லை. சுகாதாரத்துறை அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும். மத்திய அரசு விவசாயிகளின் நலன் காக்க அவர்களது கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.

கடந்த 2 மாதங்களில் டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும், பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களின் சுமையை உயர்த்துகிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் அனுமதியின்றி புதிய அணை கட்ட முயற்சி செய்கிறது. மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மருத்துவ சேர்க்கையில் போலி இருப்பிட சான்றிதழ் மூலம் வெளிமாநில மாணவர்கள் சேர்க்கை என்ற செய்தியால் பெற்றோர்களும், மாணவர்களும் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழக அரசு உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் நடந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையிலான எம்.எல்.ஏ.க்கள் பங்கு பெற்று நம்பிக்கையை கொடுக்கவில்லை.

ஆட்சி தொடர வேண்டும் என்றால் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே ஒருமித்த கருத்து அவசியம். அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுக்கிற வேறு கட்சி 3 எம்.எல்.ஏ.க்கள் கூட தங்களது நிலையை ஆட்சியாளர்கள் பக்கம் இன்னும் உறுதியாக தெளிவுப்படுத்தவில்லை.

கவர்னர் நடவடிக்கையை தமிழக மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். அவரது நடவடிக்கை ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் நடுநிலை அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

மறுதேர்தல் போன்ற சூழல் ஏற்பட்டால் தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தலை சந்திக்க தயார் நிலையிலேயே உள்ளது. த.மா.க. தமிழக அரசியலில் ஆளும் கட்சியுடனும் இல்லை, எதிர்கட்சியுடனும் இல்லை. தனித்தன்மையுடன் செயல்படுகிறோம். தேர்தல் நெருங்கும்போது மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒத்த கட்சிகளுடன் கூட்டணி சேர கூடிய நிலை ஏற்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.