வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில்பாலாஜியின் நண்பர் நவ்ரங் சுப்பிரமணியன் காரில் சோதனை நடத்திய காட்சி. 
செய்திகள்

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்கள் நிறுவனங்களில் 2-வது நாளாக சோதனை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்களின் வீடுகள்- நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி அ.தி.மு.க. (அம்மா) அணியில் டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என கவர்னரிடம் மனு கொடுத்த 18 பேரில் இவரும் ஒருவர். இதையடுத்து சபாநாயகர் தனபால், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக ரூ.4½ கோடி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே கரூர் மாவட்டத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடு, நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். கரூர் ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம், வாங்கல், ராமேஸ்வரபட்டி உள்ளிட்ட 22 இடங்களில் உள்ள அவரது நண்பர்களான தியாகராஜன், சாமிநாதன், செல்வராஜ், மனோகரன், எம்.சி. சங்கர், ஆனந்த், ஓட்டல் தொழில் அதிபர் சுப்பிரமணியன், நிதி நிறுவன அதிபர் நவ்ரங் சுப்பிரமணியன் உள்ளிட்டோரின் நிறுவனங்கள், வீடுகளில் இந்த சோதனை நடந்தது.


கோவை வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் 20 குழுவினர் தனித்தனியாக பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டனர். சோதனைக்குள்ளான செந்தில் பாலாஜியின் நண்பர்களிடம் தொழில் நடத்துவதற்கான நிதி ஆதாரம் வந்தது எப்படி? வருமானத்திற்கு முறையாக கணக்கு காட்டியுள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 10 மணி வரை நடந்தது. பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

ராமகிருஷ்ணபுரத்தில் நவ்ரங்க் சுப்பிரமணியனின் நிதி நிறுவனத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் இரவு 10 மணிக்கு சோதனையை முடித்துக் கொண்டு வெளியே வந்தனர். அப்போது, அவரிடம் என்ன கேட்டார்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். பல வி‌ஷயங்கள் கேட்டார்கள். இதுபற்றி வருமான வரித்துறையினரிடம் கேளுங்கள் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். அதன்பிறகு நவ்ரங் சுப்பிரமணியனை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நவ்ரங்க் சுப்பிரமணியத்தின் காரிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்றைய சோதனையில் 3 இடங்களில் மட்டும் சோதனை முடிவுக்கு வந்திருப்பதாகவும், மற்ற இடங்களில் இன்று 2-வது நாளாக சோதனை தொடரும் எனவும் சென்னை வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அந்த அதிகாரி கூறுகையில், இதுவரை நடந்த சோதனையில் ரூ.1 கோடி கணக்கில் வராத பணமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து இன்று 2-வதுநாளாக கரூர் பகுதியில் உள்ள செந்தில்பாலாஜியின் நண்பர்கள் வீடுகள், அவர்கள் நடத்தி வரும் ஜவுளி நிறுவனங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனைக்குள்ளான தியாகராஜன் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் கரூர் சணப்பிரட்டியில் மருத்துவ கல்லூரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அப்பீல் மனு உச்சநீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர் தேர்வு செய்த சணப்பிரட்டியில் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன.