கரூர்:
டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வீ.செந்தில் பாலாஜி கரூர் ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மேலூரில் வருகிற 15-ந்தேதி டி.டி.வி.தினகரன் புதிய கட்சி மற்றும் கொடியை அறிமுகப்படுத்துகிறார். இந்த புதிய கட்சி அறிவிப்பு என்பது இடைக்கால ஏற்பாடு மட்டும் தான். அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தை யும் மீட்பது தான் குறிக்கோள்.
நமக்கு சாதகமான தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 18 பேரும் மீண்டும் சட்டமன்றத்திற்கு போவோம். ஓ.பி.எஸ்., இ.பி. எஸ். இருவரும் வீட்டிற்கு செல்வார்கள்.
டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மலரும். தமிழக உரிமைகள் பாதுகாக்கப்படும். அமைச்சர் ஜெயக்குமார் டி.டி.வி.தினகரனை பற்றி விமர்சிக்கும் போது சட்டிபானை என்று விமர்சனம் செய்கிறார். ஆர். கே.நகர் தேர்தல் சின்னத்தில் பானை சின்னமும் இடம் பெற்று இருந்தது.
அதை பார்க்கும் போது அமைச்சர் ஜெயக்குமாரின் மண்டை தான் நினைவுக்கு வருகிறது. ஒரு வேளை நமக்கு அந்த சின்னம் கிடைத்திருந்தால் அவர் மேல் உள்ள கோபத்தில் ஓட்டு கிடைத்திருக்காது.
புதிய இயக்கம் தொடங்கப்பட்டவுடன் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த ஆட்சி வருகிற ஒரு அமாவாசை வரை கூட தாங்காது.
இவ்வாறு அவர் கூறினார்.