நெல்லை:
முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளிக்கும் டி.என். பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்டதாக அய்யப்பன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவர் தி.மு.க. உறுப்பினர் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவுவின் ஆதரவாளர் என்றும் கூறியுள்ளார். இதில் எந்தவித உண்மையும் இல்லை.
கைதான அய்யப்பன் தி.மு.க. உறுப்பினராக இல்லை. எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. 1996-ம் ஆண்டில் இருந்து 24 வருடமாக நான் பொது வாழ்க்கையில் உள்ளேன். இதில் 15 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளேன். இதுவரை எந்த தவறும் நான் செய்ததில்லை.
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது எண்ணுடன் ஏராளமானவர்கள் புகைப்படம் எடுத்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு எனது பெயரை கெடுக்க வேண்டும் என்றே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.
உண்மையில் எனக்கும் அதற்கும் சம்பந்தம் இருந்தால் என்னை விட்டு வைப்பார்களா? டி.என்.பி.எஸ்.சி. ஊழலில் அடிமட்டத்தில் உள்ள சிலர் மட்டும் சிக்கியுள்ளனர். மேல்மட்டத்தில் உள்ளவர்கள் இன்னும் சிக்க வில்லை. எனவே இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.
இனி வரப்போகும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளையும் ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் நடத்த வேண்டும். இதற்கு அவர்கள் தயாரா? அவர்கள் செய்த தவறை தி.மு.க. மீது பழி போட்டு தப்பிக்க நினைக்கிறார்கள்.
ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் ஓட்டுகள் முறை கேடாக எண்ணப்பட்டு வெற்றி அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கோர்ட்டில் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். தேர்தல் வழக்குகளை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் எதிர் தரப்பினர் இழுத்தடிப்பதால் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐகோர்ட்டு தபால் ஓட்டுகளையும், கடைசி 3 சுற்று வாக்குகளையும் எண்ண உத்தரவிட்டது.
இதில் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு நானும், இன்பதுரையும் கையெழுத்திட்டுள்ளோம். இதில் நான் 98 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த முடிவை அறிவிப்பதற்குள் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று தடை வாங்கி விட்டார்கள். ஐகோர்ட்டு நீதிபதி தான் தீர்ப்பை அறிவிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நான் வெளியே சொல்லக் கூடாது என்று எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே இதனை நான் கூறுவது நீதிமன்ற அவமதிப்பு இல்லை. சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தடையை நீக்கி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் என்றும் நம்புகிறேன்.
தற்போது தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. இதிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் மற்றும் ஏ.எல். எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் உடனிருந்தனர்.