இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள திருக்கோவில் மற்றும் திருமடங்களைச்சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் நலவாழ்வு சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது.
யானைகள் நலவாழ்வு சிறப்பு முகாம் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் 4 ஆண்டுகளும் அதனைத்தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் 7 ஆண்டுகளும் நடைபெற்றது.
வழக்கம்போல் இந்த ஆண்டு 12-வது யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முகாம் அமைக்க தேவையான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு முகாம் துவக்குவதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு இங்கு நடைபெற்ற 48 நாள் முகாமில் 33 யானைகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து வழக்கமாக முகாம் நடைபெறும் பவானியாற்று கரையோரப்பகுதி சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 30-க்கும் மேற்பட்ட யானைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் இவற்றை கட்டி வைக்கப்படும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.
முகாமில் உள்ள யானைகள் காலை, மாலை என இரு நேரங்களில் நடைப்பயிற்சிக்கு கொண்டு செல்லப்படும் என்பதால் இதற்கான பகுதிகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.