கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் வியாபாரிகள் கவனமாக இருக்க வேண்டும் - எஸ்.பி., அறிவுறுத்தல்

பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் ஊத்துக்குளி போலீசில் புகார் அளித்தனர்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவை சேர்ந்தவர் துரைசாமி, ஓட்டல் மற்றும் ‘பாஸ்ட் புட்’ கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சாப்பிட சென்ற ஒருவர், சாப்பிட்டுவிட்டு, அங்கு ஒட்டியிருந்த, க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பினார்.துரைசாமியின் வங்கி கணக்குக்கு பணம் செல்லவில்லை. மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்த போது க்யூஆர் கோடில் ஓட்டல் பெயரில்லாமல் வேறு பெயர் வந்தது.

இதன் காரணமாக துரைசாமி குழப்பமடைந்தார். க்யூஆர் ஸ்டிக்கரின் மேல் வேறு ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை கண்டுபிடித்தார். கடையில் இருந்த ‘சி.சி.டி.வி.’ கேமரா பதிவை பார்த்தார். அப்போது நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்தபடி வரும் ஒருவர் ஸ்டிக்கர் மீது க்யூஆர் கோடு ஒட்டி செல்வது தெரிந்தது. அருகே உள்ள மற்றொரு ஓட்டல், ஒர்க் ஷாப், மளிகை கடை என முதலிபாளையம் சிட்கோவில் உள்ள பெரும்பாலான கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரிந்தது.

பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் ஊத்துக்குளி போலீசில் புகார் அளித்தனர். திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சஷாங் சாய் கூறுகையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள், கடைக்காரர்கள், ‘க்யூ ஆர்’ கோடில் பணம் அனுப்பும் முன் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை உறுதி செய்து கொள்ள வேண்டும். கடைகளில் வெளியே சுவற்றில் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டாம் என்றார்.