மணலில் உருவாக்கிய பள்ளி மேலாண்மை குழு லோகோவை பார்வையிடும் பொதுமக்கள். 
உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு லோகோவை மணல் சிற்பமாக உருவாக்கிய பெண் தன்னார்வலர்

பள்ளி மேலாண்மை குழு லோகோவை மணல் சிற்பமாக உருவாக்கிய பெண் தன்னார்வலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

பேராவூரணி:

பேராவூரணியை அடுத்த காலகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்&பானுமதி தம்பதி மகள் ரதி (வயது 41) எம்.எஸ்.சி., எம்பில், மைக்ரோபயாலஜி பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது பெற்றோருக்கு உதவியாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில், தன்னார்வலராகப் பணியாற்றி வரும் இவர் 21 குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெற்றது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை கவரும் விதமாக நம் பள்ளி, நம் பெருமை என்ற தமிழக அரசின் பள்ளி மேலாண்மை குழுவிற்கான லோகோவை மணல் சிற்பமாக ரதி வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

“எனக்கு மணல் சிற்பம் குறித்த முன் அனுபவமோ பயிற்சியோ இல்லாத நிலையில், தானாக முயற்சி செய்து மணல் சிற்பம் அமைக்க கற்றுக் கொண்டேன். இதற்கு முன் திருவள்ளுவர், பகத்சிங் உள்ளிட்டோரின் மணல் சிற்பங்களை அமைத்துள்ளேன். பள்ளி மேலாண்மை குழுவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளேன்” என்றார்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ராமநாதன், கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “ ரதி உருவாக்கியுள்ள மணல் சிற்பம் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது.” நம் பள்ளி நம் பெருமை” என்ற தலைப்பில் அவர் உருவாக்கியுள்ள மணல் சிற்பம் சிறப்பாக உள்ளது. அவருக்கு பாராட்டுகள்” என்றனர். தன்னார்வலர் ரதி உருவாக்கி உள்ள மணல் சிற்பத்தை கிராமத்தினர், மாணவர்கள் நேரில் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.