சென்னையில் மழை ஓய்ந்த போதிலும், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
சென்னை கோயம்பேடு பாடிகுப்பம் தரைப்பாலத்தில் தண்ணீர் தற்போதும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் அதிகளவில் தண்ணீர் ஓடியதால் போக்குவரத்தும் அந்த வழியாக துண்டிக்கப்பட்டு இருந்தது.
நேற்று மாலையிலும் பாலத்தின்மேல் தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் கொளத்தூரைச் சேர்ந்த புகழ் என்ற வாலிபர் நேற்று இரவு 10 மணியளவில் அந்த பாலம் வழியாக நடந்து கோயம்பேடு நோக்கி வந்து கொண்டி ருந்தார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை செய்து வரும் புகழ் அங்கு செல்வதற்காகவே பாலம் வழியாக வந்துள்ளார். அப்போது திடீரென வெள்ளம் அவரை இழுத்து சென்றது. இதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் புகழ் தவித்தார்.
பின்னர் கூவம் ஆற்றம் கரையோரம் உள்ள முள் மரக்கிளை ஒன்றை புகழ் பிடித்து கொண்டார். இதனால் அவர் வெள்ளத்தில் மேலும் அடித்து செல்லப்படாமல் தப்பினார்.
இருப்பினும் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவரால் அங்கிருந்து வெளியேறி கரைசேர முடியவில்லை. இதனால் இரவு முழுவதும் தண்ணீரிலேயே குளிரில் நடுங்கியபடி தத்தளித்தார்.
விடிய விடிய உயிர் பயத்துடன் போராடிய புகழ் இன்று காலையில் விடிந்த பிறகு கையை காட்டி சாலையில் நடந்து சென்றவர்களிடம் உதவி கேட்டார். உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் காலை 6.30 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மத்திய சென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன் அறிவுறுத்தலின் பேரில் கோயம்பேடு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் உயிர் காக்கும் உடைகள் அணிந்து கொண்டு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி சிறிய படகு மூலம் புகழ் தண்ணீரில் தவித்த பகுதிக்கு சென்று அவரை பத்திரமாக மீட்டனர். சுமார் 8 மணி நேரம் வரையில் கூவத்தில் தத்தளித்த தொழிலாளி புகழை மீட்டு வெளியில் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்களை சக அதிகாரிகள் பாராட்டினார்கள்.
மீட்கப்பட்ட புகழை தீயணைப்பு வீரர்கள் ஆசுவாசப்படுத்தி பத்திரமாக அங்கிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படியுங்கள்...‘ஒமிக்ரான்’ அச்சுறுத்தலுக்கு இடையில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது