திருச்சி:
தேர்தல் தொடர்பான வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 14-ந்தேதி முதல் திருச்சியில் தங்கி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் இன்று 6-வது நாளாக கையெழுத்திட்டார். கடைசி நாளாக கையெழுத்து போட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியில் உள்ள கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் காட்டிய அன்பு என்னை திக்கு முக்காட செய்தது. காலை ஒருவர் வீடு, மதியம் ஒருவர் வீடு, மாலை ஒருவர் வீடு என இதுவரை 300-க்கும் அதிகமானோர் சேர்ந்து என்னை அன்புடன் கவனித்தார்கள்.
தொடர்ந்து பல அராஜகங்களை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். முதல்வர் துபாய் பயணம் குறித்த கேள்விக்கு முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் சென்ற போது எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பது குறித்து தெளிவாக எடுத்துக் கூறினர்.
ஏற்கனவே இதற்கான விதைகள் போடப்பட்டது, ஆனால் தற்போது மு.க ஸ்டாலின் சென்றிருப்பது அவருடைய சொந்த பயணமா? அல்லது முதலீடுகளை ஈர்ப்பதற்காகவா என்று தெரியவில்லை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகாராஜன் வாய் திமிருடன் பேசி வருகிறார். 2 கோடியே 14 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள். 5 வருடத்திற்கு கொடுக்க வேண்டும் என்றால் அவ்வளவு நிதி நம்மிடம் உள்ளதா? கல்விக்கடன் ரத்து, விவசாய கடன் ரத்து என்று மக்களை திசைதிருப்பி ஏமாற்றி வாக்குகளை தி.மு.க.வினர் பெற்றார்கள்.
தாலிக்கு தங்கம் என்கிற மகத்தான திட்டத்திற்கு மூடு விழா செய்து விட்டனர். நிதிநிலையை பெருக்குவதற்கு என்ன மாதிரியான வழிமுறைகள் உள்ளது என்பதனை யோசிக்கவே இல்லை. அதற்காக ஆட்சிக்கு வந்தவுடன் அமைக்கப்பட்ட பொருளாதார நிபுணர் குழு இதுவரை என்ன செய்துள்ளது? திறமையற்ற நிர்வாகம் தமிழகத்தை ஆண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்து ஜெயக்குமாரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். பின்னர் அவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதை தொடர்ந்து கோவைக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார்.
இதையும் படியுங்கள்...மேற்கு வங்காளத்தில் 8 பேர் எரித்துக்கொலை- சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு