அன்புமணி ராமதாஸ் 
உள்ளூர் செய்திகள்

தரமற்ற மின்கம்பங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலங்களில் தயாரிக்கப்பட்ட மின் கம்பங்களை தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புதிதாக நடப்பட்ட மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்ததில், அதில் பணியாற்றிக் கொண்டிருந்த காளிராஜ் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கும் நிகழ்வாகும்.

இந்த விபத்தில் காளிராஜுக்கு உதவியாக பணியாற்றிய முருகேசன் என்ற பணியாளர் கை முறிந்து சிவகாசி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். இந்த நிகழ்வு குறித்து விசாரிப்பதற்காக பா.ம.க. பொருளாளர் திலகபாமா தலைமையில் குழு ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.

விபத்து நடந்த இடத்திலும், நமஸ்கரித்தான் பட்டியில் உள்ள காளிராஜின் வீட்டிலும் அக்குழுவினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி யூட்டும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன.

காளிராஜின் மறைவுக்கு அவர் காரணமல்ல. எங்கோ நடந்த ஊழலும், மின்கம்பத்தை தயாரிப்பதற்கான தரத்தில் தெரிந்தே செய்யப்பட்ட சமரசமும் தான் காளிராஜின் இறப்புக்குக் காரணம் ஆகும்.

காளிராஜ் இறந்திருக்காவிட்டால் இன்னும் 33 ஆண்டுகள் பணியாற்றியிருப்பார். அதைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.

உடைந்து விழுந்த மின்கம்பத்தில் பயன்படுத்தப்பட்ட கம்பியின் தடிமன் அதில் பாதியளவுக்குக் கூட இல்லை. அதனால் தான் சராசரியாக 60 கிலோ எடை கொண்ட இரண்டு தொழிலாளர்களைக் கூட தாங்க முடியாமல் அந்த மின் கம்பம் உடைந்து விழுந்து விட்டது.

அதில் இருந்தே அந்த மின் கம்பம் எந்த அளவுக்கு தரமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும் சிவகாசியில் உடைந்தது மட்டும் தான் தரமற்ற மின்கம்பம் என்று கூறி விட முடியாது. தென்காசி, திருவில்லிபுத்தூர் என பல இடங்களில் இதே போல் மின்கம்பங்கள் உடைந்துள்ளன. பல இடங்களில் மின் கம்பங்களை சரக்குந்துகளில் இருந்து தரையில் இறக்கி வைக்கும் போதே உடைந்த நிகழ்வுகளும் உண்டு.

இத்தகைய ஆபத்துகளைத் தடுக்க, சிவகாசியில் உடைந்த மின்கம்பத்தை தயாரித்தவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட மின்கம்பங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலங்களில் தயாரிக்கப்பட்ட மின் கம்பங்களை தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

தரமற்ற மின் கம்பங்களை தயாரித்த நிறுவனங்கள் எவை? தரமற்ற மின்கம்பங்கள் என்று தெரிந்தும் அவற்றை கொள்முதல் செய்ய அனுமதித்தவர்கள் யார்? அவ்வாறு செய்ய அவர்களுக்கு ஏதேனும் அழுத்தம் தரப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்; அதன் நிறைவில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்...அம்பேத்கரின் கனவை நாங்கள் விரைவில் அடைவோம்: ராகுல் காந்தி