சேலம்:
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் பசுபதி (வயது 26). டிரைவர். இவரது மனைவி சண்முகப்பிரியா (25). இவர்களுக்கு வெற்றிவேல் (6), மாறன் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சண்முகப்பிரியாவுக்கும், கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான தமிழரசன் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இதனை அறிந்த பசுபதி, 2 பேரையும் கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் தமிழரசன், பசுபதியை கத்தியால் குத்தினார். இதனிடையே சண்முகப்பிரியா குழந்தைகளுடன் தமிழரசனுடன் சென்று வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இருந்து மகன் மாறன் கீழே விழுந்து தலையில் அடிபட்டதாக கூறி மகனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தாய் சண்முகப்பிரியா சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது சுயநினைவின்றி மாறன் இருந்ததால் அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தமிழரசனை பிடித்து விசாரித்த போது, சிறுவன் மாறன் இரவு நேரத்தில் அடிக்கடி அழுது வந்துள்ளான். இது அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த தமிழரசன் சிறுவனை சுவற்றில் தூக்கி அடித்துள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த சிறுவன் மீண்டும் எழுந்திருக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த கள்ளக்காதலர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து சிறுவன் கீழே விழுந்ததாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளது தெரிய வந்தது.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தான். இதையடுத்து தமிழரசன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும், மகன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததாக கூறி நாடகமாடிய தாய் சண்முகப்பிரியா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.