உருளையன் பேட்டை போலீஸ் நிலையம் முன்பு வியாபாரிகள் போராட்டம் நடத்திய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

போலீசாரை கண்டித்து வியாபாரிகள் மறியல்

போலீசாரை கண்டித்து வியாபாரிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி:

புதுவை புதிய பேருந்து நிலையம் பின்புறம் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் பேன்சி ஸ்டோர் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

விலை மலிவாக பொருட்கள் கிடைப்பதால் நரிக்குறவர்கள் இங்கு வந்து மணி, கொண்டை ஊசி, கம்மல், வளையல் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கி சென்று சில்லறை வியாபாரம் செய்வது வழக்கம். 

இங்கு கடை வைத்திருப்-பவர் சங்கர் லால்(47).    இவரின் கடைக்கு 12 வயது நரிக்குறவ சிறுமி பொருட்களை வாங்க வந்துள்ளார். பின்னால் அவரது பெரியம்மா வந்துக்கொண்டிருந்தார்.

அந்த சிறுமியிடம் சங்கர்லால் சிலுமிஷம் செய்ததாக  அவரது பெரியம்மாவிடம் கூறியுள்ளார். அவர் இது குறித்து  உருளையன்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தார். 

உருளையன்பேட்டை போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில், சிறுமியின் உடலில் அவர் தவறான முறையில் கைவைத்தது உறுதியானது. இதனையடுத்து உருளையன்பேட்டை போலீசார் சங்கர்லாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.

தகவலறிந்த சங்கர்லாலின் உறவினர்கள், புதிய பேருந்து நிலையத்தின் பின் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் இன்று கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். 

பின்னர் அவர்கள் உருளையன் பேட்டை போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். சிறுமியை தவறான எண்ணத்தில் சங்கர்லால் தொடவில்லை, போலீசார் பொய் வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.

உருளையன்பேட்டை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.