குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மயிலாடுதுறை அருகே முட்டம் பகுதியில் 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலைக்குள் மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகிய 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், அவர்களிடம் முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா? அல்லது சாராய விற்பனையை தடுத்ததால் அரங்கேற்றப்பட்ட கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை இன்னும் முடிவடையவில்லை.
இந்த கொலை சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து முன்னதாகவே புகார் அளித்தும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது தெரியவந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.