கோவை:
கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண் காணிக்க 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு கவுண்டம் பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுமதி தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த தம்பதியினரிடம் சோதனை நடத்தியதில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதியின் படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்துச் செல்லக்கூடாது. ஆனால் அதற்கும் அதிகமாக பணத்தை எடுத்துச் சென்றதால் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதற்கு முறையான ஆவணங்களை காட்டும் பட்சத்தில் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் பறக்கும் படையினர் 21 லட்சத்து 33 ஆயிரத்து 700 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இதனை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் மற்றும் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும். உரிய ஆவணங்களை சமர்பித்து பறிமுதல் செய்யப் பட்டவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.