உள்ளூர் செய்திகள்

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது

பெலாப்பாடி கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த தும்பல் வனத்துறை அதிகாரிகள், நேற்று அருநூற்றுமலை பெலாப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, நாட்டுத் துப்பாக்கியுடன் வந்த ஒருவர், வன அதிகாரிகளை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தார்.

அந்த நபரை மடக்கி பிடித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அவர், அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் விவசாயி பழனிசாமி (வயது31) என்பதும், அவர் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பழனிசாமியை தும்பல் வனத்துறையினர் காரிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, பழனிச்சாமியை கைது செய்து, அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.