ஜந்தர் மந்தரில் நடந்த அமைதிப் பேரணி 
செய்திகள்

டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதிப் பேரணி- கபில் மிஸ்ரா பங்கேற்பு

டெல்லி வன்முறையைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் இன்று அமைதிப் பேரணி நடைபெற்றது. கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கபில் மிஸ்ரா இதில் பங்கேற்றார்.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் நடந்த வன்முறையில் இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது, டெல்லியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. எனினும், முக்கியமான இடங்களில் துணை ராணுவப்படையினரும், காவல்துறையினரும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி வன்முறையைக் கண்டித்து, ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் ’பாரத் மாதா கி ஜெய்’ , ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷங்கள் எழுப்பினர். தேசியக்கொடியையும் கையில் ஏந்திய படி நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். டெல்லி அமைதி மன்றம் (Delhi Peace Forum) சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவும் கலந்து கொண்டார். 

கபில் மிஸ்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதே கலவரத்திற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இன்றைய அமைதிப்பேரணியில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என அவர் டுவிட்டர் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.