செய்திகள்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புனேக்கு மாற்றம் - ரசிகர்கள் ஏமாற்றம்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னையில் இருந்து புனேக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னையில் இருந்து புனேக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் கடந்த 21 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தது. தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. டென்னிஸ் (ஆண்கள் மட்டும்) தொடர் இது தான். ரபெல் நடால் (ஸ்பெயின்), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), மரின் சிலிச் (குரோஷியா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), லியாண்டர் பெயஸ், மகேஷ் பூபதி (இந்தியா), கார்லஸ் மோயா (ஸ்பெயின்), பாட்ரிக் ராப்டர் (ஆஸ்திரேலியா) போன்ற உலகப் பிரசித்தி பெற்ற டென்னிஸ் வீரர்கள் கால்பதித்த போட்டி இது. சென்னை ஓபனுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

ஒரு கட்டத்தில் இந்த போட்டி சென்னையில் இருந்து மாற்றப்படும் அபாயம் உருவான போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா நிதி உதவி அளித்து, இந்த போட்டி சென்னையிலேயே நீடிக்க உதவி செய்தார். கடந்த ஜனவரி மாதம் இந்த போட்டியை நடத்துவதற்கு தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.2 கோடி நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த சீசனில் ஒற்றையரில் பாவ்டிஸ்டா அகுத்தும் (ஸ்பெயின்), இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடியினரும் பட்டத்தை வென்றனர்.

வெற்றிகரமாக இந்த போட்டி நடத்தப்பட்டாலும் இதில் பங்கேற்கும் வீரர்களின் போட்டி கட்டணம் மற்றும் பரிசுத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதனால் தான் 4 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, கடந்த முறை சென்னை ஓபன் டென்னிசை புறக்கணித்தார்.

இந்த நிலையில் வர்த்தக நலன் கருதி இந்த போட்டி அதிரடியாக சென்னையில் இருந்து மராட்டிய மாநிலம் புனேவுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்திடம் இதற்குரிய அங்கீகாரம் பெற்று இருக்கும் ஐ.எம்.ஜி. அமைப்பு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், ‘2018, 2019-ம் ஆண்டு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக ஐ.எம்.ஜி. எங்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளது.

2018-ம் ஆண்டு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு புதிய பிரதான ஸ்பான்சரை அழைக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளரான ஐ.எம்.ஜி.-ரிலையன்ஸ் வசம் தெரிவித்து இருந்தோம். பிரதான ஸ்பான்சர் கிடைத்து விட்டால் அதன் பிறகு மீதி நிதிக்கு தமிழக அரசு மற்றும் உள்ளூர் நிறுவனங்களை அணுகலாம் என்று கூறியிருந்தோம். இந்த சூழலில் ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகத்தரம் வாய்ந்த ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் எங்கள் மாநிலத்திற்கு வருவதை வரவேற்கிறோம். இது ‘மராட்டிய ஓபன்’ என்ற பெயரில் நடத்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த டென்னிஸ் தொடர் புதிய உச்சத்தை எட்டுவதை உறுதி செய்யும் வகையில் எங்களது நடவடிக்கைகள் இருக் கும்’ என்று கூறியுள்ளார்.

புனேயில் 2014-ம் ஆண்டு முதல் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள பாலேவாடி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளசில் டென்னிஸ் போட்டிக்குரிய வசதி வாய்ப்புகள் சிறப்பாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் அமிர்தராஜ் கூறுகையில், ‘இந்த போட்டி சென்னையில் இருந்து வேறு இடத்திற்கு செல்வது பெருத்த அவமானமாகும். இந்தியாவை விட்டு செல்லவில்லையே என்பதில் மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளாக சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை பார்த்தால் வாரம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் படையெடுப்பது இல்லை. வாரத்தின் கடைசி நாட்களில் மட்டும் ரசிகர்களின் ஆர்வம் அதிகம் இருந்ததை காண முடிந்தது. போட்டி எங்கு மாற்றப்பட்டாலும் சரி, இந்திய வீரர்கள் வெற்றிகளை குவித்தால் மட்டும் தான் அதிகமான ரசிகர்களை எதிர்பார்க்க முடியும்’ என்றார்.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுவது ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை இங்குள்ள ரசிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ரசிகர்களும் பார்க்க வருவதன் மூலம் தமிழகத்திற்கும், சென்னை மாநகருக்கும் பெருமை கிடைத்து வந்தது. அத்தகைய சிறப்பு வாய்ந்த சென்னை ஓபன் போட்டியை திடீரென புனேக்கு மாற்றப்படுவதாக வந்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. இதை தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் தமிழக அரசு மவுனமாக இருப்பது கண்டனத்திற்குரியது. எனவே சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை தொடர்ந்து சென்னையிலேயே நடத்திட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.