விபத்து 
செய்திகள்

தஞ்சை அருகே கார் மோதி வாலிபர் படுகாயம்

தஞ்சை அருகே கார் மோதி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள சீராளுர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருஞானம் என்பவரின் மகன் சதீஷ்குமார் (வயது 26). இவர் நேற்று முன்தினம் தஞ்சையில் இருந்து கள்ளப்பெரம்பூர் சாலையில் சீராளுருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சக்கரசாமந்தம் புறவழிச்சாலை அருகே வாலிபர் சதீஷ்குமார் வந்தபோது திருவையாறு புறவழிச்சாலையில் இருந்து வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாலிபர் சதீஷ்குமார் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.