செய்திகள்

மெகா கூட்டணியில் இருந்து வெளியேற நிதிஷ்குமார் தயக்கம் காட்டுவது ஏன்?

பீகாரில் யாதவ், முஸ்லீம் சமுதாயத்தினரின் வாக்குகளை இழக்கக் கூடும் என்பதால், லாலு பிரசாத் யாதவுடனான மெகா கூட்டணியில் இருந்து வெளியேற, நிதிஷ்குமார் தயக்கம் காட்டி வருகிறார்.

மாலை மலர்

பீகாரில் கடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. இதன் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இருந்து வருகிறார்.

அதற்கு முந்தைய ஆட்சியில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் முதல்- மந்திரியாக இருந்தார். இடையில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தனர்.

இப்போது நிதிஷ் குமாருக்கும், லாலு பிரசாத்துக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாரை லாலு பிரசாத் ஆதரிக்கும் நிலையில் நிதிஷ்குமார் பாரதிய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக லாலு பிரசாத் தொடர்பான வழக்குகளை மத்திய அரசு கையில் எடுத்து அவருக்கு தொல்லை கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் சி.பி.ஐ., அமலாக்க பிரிவு சோதனையும் நடந்து வருகிறது.

இதற்கு நிதிஷ்குமார் ரகசியமாக தூண்டி விடுவதுதான் காரணம் என லாலுபிரசாத் தரப்பினர் கருதுகின்றனர். எனவே, நிதிஷ்குமார் அரசியல் இருந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் எந்த நேரத்திலும் வாபஸ் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லது நிதிஷ்குமாரே மெகா கூட்டணியில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதா ஆதரவுடன் ஆட்சியை தொடரலாம் என கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தின் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 243. மெஜாரிட்டிக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் தேவை. நிதிஷ்குமாரிடம் 71 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்த கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத்திடம் 80 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசிடம் 27 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இந்த அணியில் மொத்தம் 178 பேர் இருக்கிறார்கள். பாரதிய ஜனதாவுக்கு 58 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

மெகா கூட்டணியில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதாவுடன் சேர்ந்தால் இதன் எண்ணிக்கை 129 ஆக இருக்கும். எனவே, மெஜாரிட்டிக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் நிதிஷ்குமார் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தொடரலாம் என கூறப்படுகிறது.

ஆனால், இதில் நிதிஷ்குமாருக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. லாலு பிரசாத்தை எந்த சமூகத்தினர் ஆதரிக்கிறார்களோ அதே சமூகத்தினர் தான் நிதிஷ்குமாரையும் ஆதரிக்கிறார்கள்.

நிதிஷ்குமார் குர்மி என்ற சமூகத்தை சேர்ந்தவர். இந்த சமுதாயத்தினர் பீகார் மக்கள் தொகையில் 6 சதவீதம் மட்டுமே உள்ளனர். இவர்கள் அல்லாமல் முஸ்லிம் மற்றும் யாதவ சமூகத்தினரும் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால் முஸ்லிம்கள் ஆதரவை அவர் இழக்க வேண்டி இருக்கும்.

லாலுபிரசாத் மீது மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக யாதவ சமுதாயத்தினர் பாரதிய ஜனதா மீது கோபத்தில் உள்ளனர்.

எனவே, அந்த சமுதாயத்தின் ஓட்டுகளையும் நிதிஷ்குமார் இழக்க வேண்டியது வரும். இது, எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல என்று நிதிஷ்குமார் கருதுகிறார்.