கோப்புப்படம் 
செய்திகள்

சென்னையில் இருந்து 4000 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று 4 ஆயிரம் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 2,225 பஸ்களும் கூடுதலாக 1,775 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

சென்னை:

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக சென்னையில் இருந்து 10-ந்தேதி முதல் சிறப்பு பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு விடப்பட்டன. கடந்த 3 நாட்களில் சுமார் 6½ லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை, நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து இன்று அதிகளவு மக்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், சொந்த தொழில் செய்பவர்கள், கூலி தொழிலாளர்கள் போன்றவர்கள் கடைசி நேரத்தில் பயணம் செய்வது வழக்கம்.

அதனால் இன்று 4 ஆயிரம் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 2,225 பஸ்களும் கூடுதலாக 1,775 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

நாளை காலையில் பொங்கலை கொண்டாடும் வகையில் பெரும்பாலானவர்கள் இன்று பயணத்தை மேற்கொள்கிறார்கள். இன்று காலையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம் பஸ் நிலையங்கள், கே.கே.நகர் பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய மக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்து நின்றனர்.

புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆரணி, வந்தவாசி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ்கள் விடப்பட்டு இருப்பதால் அதில் மக்கள் விரும்பி பயணம் செய்கின்றனர். குளிர்சாதன பஸ் வசதி, படுக்கை வசதியுடன் சொகுசு பஸ்களும் புதிதாக இயக்கப்படுவதால் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் ஏ.சி. பஸ்களில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

4 நாட்களில் 6½ லட்சம் பேர் பயணம் செய்த நிலையில் இன்று மட்டும் சுமார் 2 லட்சம் பேர் சென்னையில் இருந்து அரசு பஸ், ஆம்னி பஸ்களில் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம்னி பஸ் நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தாலும் வேறு வழியின்றி மக்கள் பயணம் செய்கின்றனர்.

சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இன்று பகல் நேர ரெயில்களில் பயணம் செய்ய கூட்டம் அலைமோதுகிறது.

எழும்பூரில் இருந்து காலையில் புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி எக்ஸ்பிரஸ், புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தன.

மதியம் புறப்பட்ட வைகை, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கால் வைக்க முடியாத அளவுக்கு பயணிகள் நின்று பணம் செய்தனர்.

இதேபோல் கோவை எக்ஸ்பிரஸ், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மங்களூரு எக்ஸ்பிரஸ், பெங்களூரு, மைசூர், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.