திருவனந்தபுரம்:
மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு தடவை மத்திய நிதி கமிஷனை அமைத்து அதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி உதவியை பகிர்ந்து அளிக்கிறது. நிதி கமிஷனில் வகுத்துள்ள திட்டங்கள் படி இந்த நிதி உதவிகள் வழங்கப்படும்.
இப்போது 15-வது நிதி கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திட்டங்கள் 2020-ல் இருந்து அமலுக்கு வரும். இதில் தென் மாநிலங்களுக்கு பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன. இதுவரை அமைக்கப்பட்ட நிதிகமிஷன்கள் 1971 மக்கள் தொகை அடிப்படையில் உருவாக்கப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நிதி கமிஷனை அமைத்துள்ளனர்.
1971-க்கும், 2011-க்கும் இடைப்பட்ட காலத்தில் தென் மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் தொகை பெருக்கத்தை வெகுவாக குறைத்துள்ளன. ஆனால் வடமாநிலங்களில் வழக்கம்போலவே மக்கள் தொகை பெருக்கம் இருந்தது. இதனால் வடமாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாகிவிட்டது. தென்மாநிலத்தில் மக்கள் தொகை குறைந்துவிட்டது.
இப்போது அமைக்கப்படும் நிதி கமிஷனில் 2011 மக்கள் தொகையை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் நிதி ஒதுக்குவதால் தென் மாநிலங்களுக்கு பெருமளவு நிதி குறையும். மேலும் மாநிலங்களின் வளர்ச்சி அடிப்படையிலும் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளனர்.
இதன்படி தென்மாநிலங்கள் வளர்ச்சி அடைந்த மாநிலமாகவும், வடமாநிலங்கள் வளர்ச்சி குன்றிய மாநிலங்களாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறையும். அதாவது 3 சதவீதம் வரை நிதி உதவி குறைய வாய்ப்பு உள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக தென்மாநில நிதி மந்திரிகள் மாநாடு இன்று கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுவை மாநில நிதி மந்திரிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
அதன்படி இந்த கூட்டம் இன்று நடந்து வருகிறது. இதுசம்பந்தமாக கேரள நிதி மந்திரி டி.எம். தாமஸ் கூறியதாவது:-
தென்மாநிலங்கள் 1971-க்கு பிறகு மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தி இருக்கிறது. கேரளாவில் 1971-ல் இருந்து 2011-க்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை பெருக்கம் 56 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் வடமாநிலங்களில் 150 சதவீதமாக இருக்கிறது.
2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்குவதால் தென்மாநிலங்கள் மத்திய அரசின் நிதிஉதவியில் பெரும் பங்கை இழக்க வேண்டியுள்ளது. இதில் கேரளாவுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு குறையும்.
நாங்கள் நிதிகமிஷனுக்கு எதிராக இல்லை. அதே நேரத்தில் தென்மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியிருக்கும் நிலையில் இந்த காரணத்திற்காக நிதி குறைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே தான் எங்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்ற அடிப்படையில் தென்மாநில நிதி மந்திரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் எவரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #TamilNews