ஆரோக்கியம்

கழுத்து வலிக்கான காரணம்

கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம்.

மாலை மலர்

கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம். பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத் தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத் தொடங்கிவிடுகிறது. காரணம், பலரும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வது இப்போது அதிகமாகிவிட்டதுதான்.

கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுபோல் தொடர்ந்து பல மணி நேரத்துக்குத் தொலைக்காட்சி பார்ப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது, கழுத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு உறங்குவது. தலையணைகளைத் தலைக்கு அடுக்கிவைத்து உறங்குவது, பல மணிநேரம் பயணிப்பது, பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவது போன்றவையும் கழுத்து வலிக்குப் பாதை அமைக்கின்றன.

இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்தத் தவறான பழக்கம் நாளடைவில் கழுத்து வலியை ஏற்படுத்துகிறது. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்து வலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும்.