அழகுக் குறிப்புகள்

முகத்துக்கு சுத்தமான ரோஸ் வாட்டர்! வீட்டிலேயே தயாரிக்கும் ரகசியம்!

ஆவி வடித்தல் முறையில் சேகரித்த ரோஸ் வாட்டரை 6 மாதங்கள் வரை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருபாலருமே தங்களின் முக அழகைப் பராமரிக்க 'ரோஸ் வாட்டர்' பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சருமத்தை பொலிவாக்கவும், முகப்பருக்களைக் குறைக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

ஆனால், சந்தைகளில் கெமிக்கல் கலந்து விற்கப்படும் ரோஸ் வாட்டரை வாங்குவதை விட, வீட்டிலேயே 100% இயற்கையான முறையில் ரோஸ் வாட்டர் தயாரிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தேவையான பொருட்கள்..

பன்னீர் ரோஜா இதழ்கள் - 2 கைப்பிடி அளவு (நாட்டு ரோஜா சிறந்தது)

சுத்திகரிக்கப்பட்ட நீர் - 2 கோப்பை

ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

ஆவி வடித்தல் முறை..

கடைகளில் விற்கப்படும் ரோஸ் வாட்டரை விட அதிக நாட்கள் கெடாமல் இருக்கும் சுத்தமான தயாரிப்பு முறையாகும்.

ஒரு அகலமான பாத்திரத்தின் நடுவே ஒரு சிறிய காலி கிண்ணத்தை வைத்து, அந்த பாத்திரத்தைச் சுற்றி, நன்றாகக் கழுவி சுத்தம் செய்த ரோஜா இதழ்களைப் போட வேண்டும். இதழ்கள் மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீரைச் சுற்றிலும் ஊற்றவும் நடுவில் உள்ள கிண்ணத்திற்குள் தண்ணீர் போகக் கூடாது.

இப்போது பாத்திரத்தின் மூடியைத் தலைகீழாக குவிந்த பகுதி அடிப்பக்கமாக இருக்குமாறு மூடி, அடுப்பை மிதமான பதத்தில் வைக்க வேண்டும். தலைகீழாக மூடிய தட்டின் மேல் தேவையான அளவு ஐஸ் கட்டிகளை வைக்க வேண்டும்.

மேஜிக் என்னவென்றால்:

பாத்திரத்தில் உள்ள நீர் கொதிக்கும் போது ரோஜாவின் சத்துக்கள் ஆவியாக மேலே எழும்பும். மூடியின் மேல் இருக்கும் ஐஸ் கட்டிகளின் குளிர்ச்சியால், அந்த ஆவி மீண்டும் நீர்த்துளிகளாக மாறி, பாத்திரத்தின் நடுவே நீங்கள் வைத்துள்ள காலி கிண்ணத்திற்குள் சொட்டு சொட்டாக விழும். இதுதான் 100% அசல் ரோஸ் வாட்டர்!

கொதிக்க வைக்கும் முறை..

உடனடி பயன்பாட்டிற்கு ரோஸ் வாட்டர் வேண்டும் என்றால் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் ரோஜா இதழ்களைப் போட்டு மூடி வைத்த பிறகு, மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். ரோஜா இதழ்களின் நிறம் முற்றிலும் மங்கி, தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து, ஆறியதும் தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து பிறகு நம் பயன்பாட்டிற்கு உபயோகிக்கலாம்.

பயன்பாட்டு ரகசியம் மற்றும் ஆயுட்காலம்..

ஆவி வடித்தல் முறையில் சேகரித்த ரோஸ் வாட்டரை 6 மாதங்கள் வரை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். கொதிக்க வைத்த ரோஸ் வாட்டரை 1 முதல் 2 வாரங்கள் பயன்படுத்தலாம்.

தினமும் இரவில் முகத்தைக் கழுவிய பின், இந்த ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் 'டோனர்' போல தடவி வந்தால், சருமம் எப்போதும் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.