இதயம் எந்நேரமும் இயங்கிக் கொண்டேதான் இருக்குமா? அதற்கு ஓய்வு என்பதே கிடையாதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.
பொதுவாக நம் இதயம் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து செயல்படுவதுபோல் தோன்றும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. எந்த உறுப்பாக இருந்தாலும் அது நீண்ட நாள்களுக்கு நன்றாகச் செயல்பட சற்று ஓய்வு தேவை.
இதயத்துக்கும் இந்த விதி பொருந்தும். ஆனால் மற்ற உறுப்புகளைப்போல் இதயம் ஓய்வு எடுத்தால் நமது நிலை என்னவாகும்? இதயம் இயங்கிக் கொண்டே ஓய்வு எடுத்துக் கொள்ள இயற்கையே சில விந்தையான வழி முறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொரு முறையும் சுருங்கி விரியும்போது கிடைக்கும். அரை நொடிப் பொழுதை இதயம் ஓய்வுக்காக பயன்படுத்திக் கொள்கிறது.
இதுபோல் இரவில் தூங்கும் போது நம் உடலில் உள்ள மிகவும் நுண்ணிய ரத்தக் குழாய்களுக்குத் தேவையான ரத்தத்தை அனுப்புவதை ஓரளவு குறைத்துக் கொள்வதன் மூலமாகவும், இதயமானது தன்னுடைய வேலைத்திறனை குறைத்து ஓய்வு எடுத்துக் கொள்கிறது.
உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் இயங்குவதற்கு ரத்தமும், அதன்மூலம் கடத்தப்படும் பிராண வாயுவும் தேவை. இதயம் இயங்க ரத்தத்தை எப்படி பெறுகிறது? இதயம் தன்னுடைய அறைகளில் கரை புரண்டு ஓடும் தூய்மையான ரத்தத்தை தான் இயங்குவதற்காக நேரிடையாகப் பயன்படுத்துவதில்லை. மாறாக உடலின் மிகப்பெரிய ரத்தக் குழாயாகிய மகா தமனியில் இருந்து முதல் கிளைகளாகப் பிரியும் இதயத் தமனிகள் மூலமாகத் தனக்குத் தேவையான ரத்தத்தை இதயம் பெறுகிறது. மகா தமனியில் இருந்து முதல் கிளைகளாக மூன்று தமனிகள் பிரிகின்றன.
இந்த 3 ரத்தக் குழாய்கள்தான் இதயம் இயங்குவதற்குத் தேவையான உயிர்வளி, ரத்தம், ஊட்டச் சத்துகள் ஆகியவற்றை வழங்குகின்றன.