இன்றைய காலகட்டத்தில் பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு முறைகள் காரணமாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு நபரும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். மனிதனின் உடலில் சரியான இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் உங்கள் உணவு ஒரு பெரிய பங்கு வகிக்கிறது.
பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகள், பீன்ஸ், பருப்புகள், முழு தானிய கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் சரியான ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகின்றன. ஒவ்வொரு உணவிலும் போதுமான அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் சேர்க்கப்பட வேண்டும். இந்தப் பதிவில் உடலுக்கு மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய மாதுளை பழத்தின் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.
மாதுளையில் உள்ள ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு இதய நோய்களில் இருந்து எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை கார்டிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மாதுளையில் உள்ள சத்துக்களை நமது குடலில் உள்ள பாக்டீரியாக்கள் சிதைக்கும்போது ‘யுரோலித்தின் ஏ’ என்ற வேதிப்பொருள் உருவாகிறது. இதுவே இதயத் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து, இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கிறது.
கொழுப்பைக் குறைப்பதில்லை, தமனியைப் பாதுகாக்கிறது: வழக்கமான மருந்துகள் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க முயற்சிக்கும். ஆனால், இந்த வேதிப்பொருள் கொழுப்பைக் குறைப்பதற்குப் பதிலாக, தமனிகளில் வீக்கம் ஏற்படுவதைத் தடுத்து, ஏற்கனவே படிந்துள்ள கொழுப்புத் தட்டுகள் உடையாமல் நிலைத்திருக்க உதவுகிறது.
மாதுளைச் சாற்றை நேரடியாகக் குடிப்பதைக் காட்டிலும், நம் குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதை எப்படி மாற்றுகின்றன என்பதில்தான் உண்மையான பலன் அடங்கியுள்ளது. தமனிகளில் ஏற்படும் தடிப்புகள் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
தமனிகளில் உள்ள கொழுப்புத் தட்டுகள் திடீரென உடைந்து ரத்த ஓட்டத்தைத் தடுப்பதால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த வேதிப்பொருள் அந்தத் தட்டுகளை உறுதியாக்கி, அவை உடையாமல் பாதுகாக்கிறது. ஒவ்வொருவரின் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் தன்மையைப் பொறுத்து, இந்த ‘யுரோலித்தின் ஏ’ உருவாகும் அளவு மாறுபடும். எனவே, மாதுளை அனைவருக்கும் ஒரே மாதிரியான பலனைத் தருவதில்லை.
இந்த ஆய்வு தற்போதைக்கு ஆய்வகச் சோதனைகள் மற்றும் விலங்குகளிடம் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது. விரைவில் மனிதர்களிடம் சோதனை செய்யப்பட்டு, இது ஒரு மருந்தாகவோ அல்லது கூடுதல் ஊட்டச்சத்தாகவோ இதய நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளது.
எனினும் இதயப் பிரச்சனைகள் இருந்தால், உணவில் பெரிய மாற்றங்களைச் செய்யும் முன் மருத்துவரை அணுகுவது அவசியம்.