இதயம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் அதில் உள்ள உயிர் தரும் அமைப்புகளும், கழிவுகளை அகற்றும் அமைப்புகளும் நன்றாகச் செயல்பட வேண்டும். தமனிகள்தான் உயிர் தரும் அமைப்புகள் என குறிப்பிடப்படுகின்றன.
இந்த வகை ரத்தக் குழாய்கள்தான் நமது உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உயிர்வளி, உயிர்சத்துகள், ஹார்மோன்கள், உணவு ஆகியவற்றை இடைவிடாது 24 மணி நேரமும் அளிக்கின்றன.
பயன்படுத்தப்பட்ட அசுத்தமான ரத்தம், நமது உடலின் பல பகுதிகளில் இருந்து பலவகையான சிறிய சிரைகளின் வழியாக இதயத்தின் வலப்பக்க மேல் அறைக்குக் கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து வலப்பக்க கீழ் அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு இந்த ரத்தமானது நுரையீரல் தமனியின் வழியாக நுரையீரல்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
நுரையீரல்களில் ரத்தமானது தூயமையாக்கப்பட்டு உயிர்வளி (அ) பிராண வாயு (அ) ஆக்சிஜன் சேர்க்கப்படுகிறது. பிறகு சுத்தம் செய்யப்பட்ட ரத்தமானது நுரையீரல் சிரையின் வழியாக இதயத்தின் இடப்புறம் உள்ள மேல் அறையை அடைந்து அடுத்து இதயத்தின் கீழ் அறையை அடைகிறது. இதயம் சுருங்கும்போது கீழ் அறையில் இருந்து ரத்தம் வெளியேறி மகா தமனியின் வழியாக ஆங்காங்கே உள்ள பலவகையான கிளைகளின் வழியாக உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.
சிரைகள்தான் கழிவுப் பொருள்கள் அகற்றும் அமைப்புகள் எனப்படுகின்றன. இந்த வகை ரத்தக் குழாய்களும் நன்றாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால் இந்த அமைப்புகள்தான் உடலில் உள்ள பல கோடிக்கணக்கான திசுக்களில் தேங்கியிருக்கும் கழிவுப் பொருள்களை ரத்தத்தின் மூலமாக இதயத்துக்குக் கொண்டு வருகின்றன.
இந்த இரண்டு அமைப்புகள் மட்டுமல்லாது. இதயத்தின் வால்வுகளும் நன்றாகச் செயல்பட வேண்டும், அப்போதுதான் இதயத்தின் பணி சிறப்பாக நடக்கும்.
மேலோட்டமாகப் பார்த்தால் ஒற்றை விசை அமைப்புபோல் இதயத்தின் இரண்டு பக்கங்களையும் சுருங்கி விரிந்து ரத்தத்தைப்பெறும் வேலையையும், அனுப்பும் வேலையையும் செய்வதுபோல் தோன்றும்.
ஆனால் இதயத்தின் வலப்பக்கம் தனி விசையாகவும், இடப்பக்கம் தனி விசை அமைப்பைக் கொண்டதாகவே கருதப்படுகிறது.