மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி 62’ படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே சூப்பர் ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் வில்லன் வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்டிரைக் நேரத்திலும் ஸ்பெஷல் பெர்மிஷன் பெற்று சென்னையில் ஷூட்டிங் நடந்து வந்தது.
இதையறிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆரவாரம் செய்தார்கள். விஜய் வெளியே வருவாரா என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஜய் வரமாட்டார் என்று பலரும் கூறினார்கள். ஆனால், விஜய் வெளியே கூடிய ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களை குஷிபடுத்தியுள்ளார்.