ஒன்ஸ்மோர் பட காட்சி 
தரவரிசை

ஒன்ஸ்மோர் - திரை விமர்சனம்

அதிதி ஷங்கர் படம் முழுவதும் துறுதுறுப்பாக வந்து, புன்னகையால் ரசிகர்களை கவர்கிறார். அர்ஜூனை துரத்தித் துரத்தி காதலிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

மாலை மலர்

“பழைய காதலை மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்கிவிட்டோம்” என்று நினைக்கும் நேரத்தில், பழைய காதல் கதவு தட்டினால் என்ன ஆகும்? என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் விக்னேஷ் ஸ்ரீகாந்த்.

கதை

கல்லூரி கால காதல் தோல்வி கொடுத்த காயத்துடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் சிவில் என்ஜினீயர் அர்ஜூன் தாஸை, பல வருடங்களுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக சந்திக்கிறார் அதிதி ஷங்கர். சந்தித்த வேகத்திலேயே தனது காதலை சொல்லிவிடும் அதிதியை, அர்ஜூன் தாஸ் முதலில் கண்டுகொள்ள மறுக்கிறார்.

ஆனால், “விடுவதாக இல்லை!” என்ற முடிவுடன் அர்ஜூன் தாசை துரத்தித் துரத்தி காதலிக்கும் அதிதியின் முயற்சி கடைசியில் பலிக்கிறது. அர்ஜூனும் காதலில் விழ, பெற்றோர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. வரவேற்பு விழாவும் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் வருகிறது அந்த ஒரே ஒரு செல்போன் கால்!

அர்ஜூனின் முன்னாள் காதலி மீண்டும் தொடர்பு கொள்கிறார். பல வருடங்களாக புதைத்து வைத்திருந்த கடந்த காலம், திருமண மேடைக்கு முன்பாக மீண்டும் வந்து நிற்கிறது.

அர்ஜூன்தாஸ் என்ன முடிவு எடுக்கிறார்? முன்னாள் காதலி யார்? அதிதியின் திருமணம் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

இதுவரை ஆக்ஷன் ஹீரோவாக பார்த்த அர்ஜூன் தாஸ், இதில் காதல், தவிப்பு, மன அழுத்தம் என உணர்வுகளைக் கொட்டியிருக்கிறார். குறிப்பாக காதல் குழப்பத்தில் அவர் தவிக்கும் காட்சிகளில் நடிப்பு கவனம் ஈர்க்கிறது.

அதிதி ஷங்கர் படம் முழுவதும் துறுதுறுப்பாக வந்து, புன்னகையால் ரசிகர்களை கவர்கிறார். அர்ஜூனை துரத்தித் துரத்தி காதலிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சோனா ஒலிக்கல் தனது அழகாலும் நடிப்பாலும் காட்சிகளுக்கு கூடுதல் ஈர்ப்பு சேர்க்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

இயக்குநர்

“பழைய காதலை மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்கிவிட்டோம்” என்று நினைக்கும் நேரத்தில், பழைய காதல் கதவு தட்டினால் என்ன ஆகும்? என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் விக்னேஷ் ஸ்ரீகாந்த்.

ஒளிப்பதிவு

கதை சில இடங்களில் மெதுவாக நகர்வது சிறிய பலவீனம் என்றாலும், அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும், ஹேசம் அப்துல் வகாபின் இசையும் படத்திற்கு காதல் உணர்வை அழகாக கூட்டுகின்றன.

மொத்தத்தில், பழைய காதலின் காயத்தையும் புதிய காதலின் சுகத்தையும் ஒரே தட்டில் பரிமாறும் ‘ஒன்ஸ்மோர்’.