ஜெய்ப்பூரில் நண்பரின் உணவகத்தில் வேலை செய்யும் சனத், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இமயாவுடன் நட்பாக பழகுகிறார். அந்த நட்பு காதலாக மாறினாலும், முதல் காதல் தோல்வியின் வலியால் சனத் அதை ஏற்க மறுக்கிறார்.
பிறகு இமயாவின் அன்பால் மனம் மாறி காதலிக்க தொடங்கும் சனத், ஒரு விபத்தில் சிக்கி கடந்த 6 ஆண்டுகால நினைவுகளை இழக்கிறார்.
அதனால் இமயாவையே மறந்துவிட்டு, தனது முதல் காதலியான மடோனா செபாஸ்டியனை தேடி செல்கிறார்.
இறுதியில் சனத் யாருடன் இணைந்தார்? மடோனா செபாஸ்டியன் ஏன் சனத்தை விட்டு சென்றார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சனத், காதல் தோல்வியால் உடைந்த இளைஞனாகவும், நினைவுகளை இழந்த பிறகு வேறு மனநிலையிலும் இயல்பாக நடித்திருக்கிறார்.
புதுமுகமான இமயா முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார். மடோனா செபாஸ்டியனும் தனது கதாபாத்திரத்தை அளவாக கையாண்டிருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
காதல், நினைவிழப்பு ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிஷோர் குமார். சுவாரஸ்யமான கருவை தேர்வு செய்து அனைவருக்கும் பிடிக்கும் விதமாக படத்தை கொடுத்து இருக்கிறார்.
குறிப்பாக இறுதியில் நாயகன் யாரை தேர்வு செய்கிறார் என்ற எதிர்பார்ப்பு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது.
ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர், ஊட்டி பகுதிகளை அழகாக காட்டியிருக்கிறார். ராஜேஷ் முருகேசனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.