திரைத்துறையில் பல தசாப்தங்களாகக் கொடிகட்டிப் பறக்கும் இசைஞானி இளையராஜா, தற்போதைய இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்த சுவாரசியமான பின்னணியையும், அதற்குப் பின்னால் உள்ள தனது பார்வையையும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனாத் நடிப்பத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்வு ஒன்றில், கே.பாலசந்தர் மற்றும் பாரதிராஜா போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட நீங்கள், என்னைப் போன்ற இளம் இயக்குநர்களுடன் பணிபுரிய ஒப்புக்கொண்டது ஏன் என்று கார்த்திக் சுப்பராஜ் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த இளையராஜா, புதிய இயக்குநர்களை ஒரு "வெற்றுப் பாத்திரம்" என்று வர்ணித்தார். "மற்ற இயக்குநர்கள் தங்களின் பாத்திரம் முழுவதும் நிரம்பிய திரவத்துடன் வருகிறார்கள், அதில் நான் புதிதாக என்ன ஊற்ற முடியும்? பாத்திரம் காலியாக இருந்தால் மட்டுமே அதில் எதையாவது நிரப்ப முடியும்" என்று கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், இளம் இயக்குநர்கள் தன்னிடம் வந்து கதைகளைக் கூறி, இசையை இன்னின்ன வழிகளில் அமைக்குமாறு எப்படிக் கேட்க முடியும் என்ற கேள்வியையும் நகைச்சுவையாகவும் தீர்க்கமாகவும் முன்வைத்தார். தற்கால இயக்குநர்கள் நல்ல இசை மற்றும் கெட்ட இசையைப் பிரித்து அறியும் அறிவைப் பெற்றிருப்பதே தனது இசையைக் கேட்டுத்தான் என்றும், தனது படைப்புகளையே அவர்கள் ஒப்பீட்டு அளவுகோலாகக் கொள்கிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.
கடவுள் தனக்குக் கொடுத்த இசை ஞானத்தால் தன்னால் படைக்கப்படும் இசையை மீறி வேறு எவராலும் யோசிக்க முடியாது என்று கூறிய இசைஞானி, "இதனை நான் அகந்தையில் சொல்வதாக நினைக்க வேண்டாம், ஏனெனில் அதைத்தான் நான் செய்து கொண்டும் இருக்கிறேன்" என மேடையில் நகைச்சுவையுடன் கூறியபோது அரங்கம் முழுவதும் பலத்த கரகோஷம் எழுந்தது.
கார்ப்பரேட் அல்லது முறையான இசைப் பயிற்சிகள் ஏதுமின்றி, முற்றிலும் தனது இயல்பான ஆற்றலால் இத்தகைய இசையை உருவாக்கி வருவதை சுட்டிக்காட்டிய அவர், உலகிலேயே தனது இசைக்கு ஈடாக வேறொன்றும் இல்லை என்பதில் தனக்கு இருக்கும் உறுதியை வெளிப்படுத்தினார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இத்திரைப்படம் வரும் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.