

சமீபத்திய திரைப்பட விழா ஒன்றில் இந்தியை தேசிய மொழி என தவறுதலாக குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக் கோரியுள்ளார்.
அவர் நடித்துள்ள ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத்தின் தலைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவராஜ்குமாரிடம், கன்னடம் மற்றும் இந்தியில் உருவாக்கப்படும் இந்த பான் இந்தியாப் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதாவது படத்தில் இந்தி வசனங்கள் பேசுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்.,
“ஏன்? இந்தி எனது இரண்டாவது மொழி. என்னால் இந்தி பேச முடியும். நீங்கள் என்ன நினைத்தீர்கள்? அது ஒரு எளிமையான மொழி, தேசிய மொழி. அது நமக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? அது நமக்குத் தெரியும்” என்றார்.
சிவராஜ் குமாரின் இந்தப் பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு சிவராஜ் குமார் மன்னிப்புக் கோரியுள்ளார்.
“நான் இந்தியை தேசிய மொழி என்று குறிப்பிட்டேன். அது இந்திய மொழிகளில் ஒன்று. எங்கள் மொழி [கன்னடம்] எங்களுக்கு எப்போதுமே முக்கியமானது. எனக்குத் தெரியவில்லை, நான் இந்திய மொழிகளில் ஒன்றைக் குறித்துக் குழம்பிவிட்டேன்.
மன்னிக்கவும், எனக்குத் தெரியவில்லை. அவர்களுடைய மொழி இந்தி; எங்களுடையது கன்னடம். அவர்களுடைய மொழி அவர்களுக்கு முக்கியமானது. அதேபோல், எங்கள் மொழி எங்களுக்கும் முக்கியமானது,” எனத் தெரிவித்துள்ளார்.
ஆர். சந்துரு இயக்கத்தில், ஆர்.சி. ஸ்டுடியோஸ் சார்பில் யமுனா சந்துரு தயாரிப்பில் உருவாகும் 'ஒரிஜினல் மான்ஸ்டர்' திரைப்படத்தில் சிவ ராஜ்குமார் மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இத்திரைப்படம், சிவராஜ் குமாரின் முதல் இந்தித் திரைப்படமாகும்.