சினிமா செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்... மீண்டும் ரிலீஸாகும் 'பைரவா'!

2017 ஆம் ஆண்டு வெளியான 'பைரவா' திரைப்படம் ஐந்து நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'பைரவா' திரைப்படம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு விருந்தாக மீண்டும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. தமிழ்நாடு முழுவதும் இப்படத்தை SIM Cine International நிறுவனம் வெளியிடுகிறது.

பரதன் இயக்கத்தில் உருவான 'பைரவா'

பி. நாகிரெட்டியாரின் புகழ்பெற்ற விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில் உருவான திரைப்படம் 'பைரவா'.

'தில்', 'தூள்', 'கில்லி', 'மதுர' மற்றும் 'வீரம்' ஆகிய வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியவரும், விஜய்யின் 'அழகிய தமிழ் மகன்' திரைப்படத்தை இயக்கியவருமான பரதன், இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்து இப்படத்தை இயக்கியிருந்தார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, இப்படத்தை மிகப்பெரிய அளவில் மீண்டும் திரையரங்குகளில் கொண்டு வர விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நட்சத்திர பட்டாளமும் சந்தோஷ் நாராயணன் இசையும்

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வில்லனாக ஜெகபதி பாபு நடிக்க, டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

குறிப்பாக, சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான 'பட்டைய கெளப்பு', 'நிலாயோ', 'பா பா' மற்றும் 'வர்லாம் வர்லாம் வா பைரவா' ஆகிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன.

வசூல் சாதனையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும்

2017-ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ஆம் தேதி திரைக்கு வந்த 'பைரவா', வெளியான 5 முதல் 6 நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலைக் கடந்து விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போதெல்லாம் அதிக பார்வைகளையும், உயர் TRP புள்ளிகளையும் பெற்றுத் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது.

புத்தாண்டு ரிலீஸ்

2017-இல் இப்படம் வெளியானபோது சிறுவர்களாக இருந்த விஜய் ரசிகர்கள், தற்போது இளைஞர்களாக வளர்ந்துள்ள நிலையில், தங்களுக்குப் பிடித்த படத்தை மீண்டும் பெரிய திரையில் கொண்டாடவும், அப்போது திரையரங்கில் பார்க்கத் தவறியவர்கள் புது அனுபவத்தைப் பெறவும் இந்த ரீ-ரிலீஸ் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

2027 புத்தாண்டின் முதல் நாளை 'பைரவா' திரைப்படத்துடன் உற்சாகமாக வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

SCROLL FOR NEXT