சினிமா செய்திகள்

ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

மகாராஜா படம் 2024ம் ஆண்டு, ஜூனில் வெளியானது.

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான ‘மகாராஜா’ திரைப்படம், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மகாராஜா

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நடிகை சாச்சனா நமிதாஸ், திவ்ய பாரதி, அபிராமி, சிங்கம் புலி, முனிஷ்காந்த், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் ‘மகாராஜா’.

தி ரூட் , திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு, அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஹாலிவுட் ரீமேக்

இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றநிலையில், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்படவுள்ளது. மகாராஜா திரைப்படம் சீனாவில் 91.65 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

மேலும், இப்படம் வெளிநாடுகளில் உள்ள ஓடிடி தளங்களிலும் பிரபலமடைந்தது.

தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்தின் தகவல்களின்படி, படத்தை ரீமேக் செய்யவுள்ள நிறுவனம் விஜய் சேதுபதிக்கான கதாபாத்திர தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் அடுத்த ஆண்டு படப்பணிகள் தொடங்கும் என்றும் தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் ஹாலிவுட் புகழ் மேத்யூ மெக்கோனாஹே தேர்வாக வாய்ப்புள்ளதாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT