விஜய் முதலமைச்சராவதை முன்கூட்டியே சரியாகக் கணித்தது போல் அமைந்ததாக வெங்கட் பிரபு பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை முன்னிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு சிறப்பு வீடியோவை பகிர்ந்துள்ளார். விஜய் திரையுலகில் பெற்ற மகத்தான வெற்றியையும், அவரது தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் அரசியல் பயணத்தையும் ஒரே நேர்கோட்டில் இணைத்துக் காட்டும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள அந்த நினைவலை வீடியோ, 'கோட்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் திரையரங்குகளில் எழுப்பிய அதிரடி ஆரவாரத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, படத்தில் விஜய் நடித்த முக்கியக் காட்சிகளையும், நிஜ வாழ்க்கையில் அவர் முதலமைச்சராகப் பதவியேற்றுப் பொறுப்புகளை வகிக்கும் காட்சிகளையும் அருகருகே ஒப்பீடு செய்து நெகிழ்ச்சியாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த வீடியோவில் மிகவும் சுவாரஸ்யமான அம்சமாக, 'கோட்' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட "TN07 CM 2026" என்ற புகழ்பெற்ற வாகனப் பெயர் பலகை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெற்ற இந்தக் காட்சி, விஜய் முதலமைச்சராவதை முன்கூட்டியே சரியாகக் கணித்தது போல் அமைந்ததாக வெங்கட் பிரபு பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், வீடியோவின் இறுதியில் படத்தில் வரும் இளைய விஜய் கதாபாத்திரம் பேசும் "என்னை தடுத்து நிறுத்திட முடியும்னு நினைக்கிறியா?" என்ற மாஸ் வசனத்தைத் தொடர்ந்து, விஜய் முதலமைச்சராக இருக்கும் நிஜக் காட்சிகள் வருவது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று திரைக்கு வந்த 'கோட்' திரைப்படம், விஜய்யின் முழு நேர அரசியல் வருகைக்கு முந்தைய முக்கிய திரைப்படமாக அமைந்தது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் உலகளவில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனையைப் படைத்தது. "வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத இனிய நினைவுகளுக்கு நன்றி விஜய் அண்ணா" என்ற உருக்கமான வரிகளுடன் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.