

ஜேசன் சஞ்சய் இயக்கத்திற்குப் பதிலாக நடிப்பைத் தேர்வு செய்திருந்தால், அறிமுகப் படத்திலேயே இந்திய அளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் நட்சத்திரமாக உயர்ந்திருப்பார் என நடிகர் சந்தீப் கிஷன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ‘சிக்மா’ படத்தின் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய் நடனமாடியுள்ளார்.
ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படித்துள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனரான ஜேசன் சஞ்சய் விரைவில் கதாநாயகனாகவும் அறிமுகமாக உள்ளதாகவும் அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.எம்.தமிழ் குமரன் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’படம் ஜி.கே.எம். தமிழ்குமரன் தலைவராக இருக்கும் லைகா தயாரித்து உள்ளது. அடுத்ததாக ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் முதல் படத்தையும் தமிழ் குமரன் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘சிக்மா’ படத்தின் கதாநாயகனான சந்தீப் கிஷன் நேர்காணல் ஒன்றில் ஜேசன் சஞ்சய் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “ஜேசன் சஞ்சய் இயக்கத்திற்குப் பதிலாக நடிப்பைத் தேர்வு செய்திருந்தால், அறிமுகப் படத்திலேயே இந்திய அளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் நட்சத்திரமாக உயர்ந்திருப்பார் ஆனால், நடிப்புக்கு முன்பாக இயக்குநராக தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதே ஜேசன் சஞ்சயின் விருப்பம், அவரது முதல் படமான 'சிக்மா' வெற்றி பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.