மூத்த தெலுங்கு குணச்சித்திர நடிகை பாவாலா ஷியாமலா (75) காலமானார்.
கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனையில் நள்ளிரவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக அவரிடம் போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர். பின்னர் போலீசார் அவரை மீட்டனர். ஸ்யாமலா சாலையில் ஆதரவின்றி கிடந்த வீடியோ வைரலாகி பின்னர் தயாரிப்பாளர் தில் ராஜு முன்வந்து அவரின் மருத்துவ செலவுக்கு உதவினார்.
ஷியாமலா, 1951ல் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம், அமராவதியில் பிறந்தார். நடிப்பில் ஆர்வம் கொண்ட அவர், முதலில் மேடை நடிகையாகவும் வானொலிக் கலைஞராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வரும் பாவாலா ஷியாமலா, 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தனது இயல்பான நடிப்பு மற்றும் நகைச்சுவை உணர்வுக்கு பெயர் போனவர் ஸ்யாமளா.
குறிப்பாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கோபிசந்த் (ஜெயம் பட வில்லன்) நாயகனாக நடித்து 2010 இல் வெளியான கோலிமார் படத்தில் ஸ்யாமளா இடம்பெற்ற நகைச்சுவை காட்சி தெலுங்கு சினிமா ரசிகர்கள் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரசித்தம்.
தமிழ் டப்பிங்கில் 'கொக்கு' என்ற பெயரில் வெளியான இப்படத்தில் கோபிசந்த் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக இருப்பார். பிரியாமணி அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். வெளிநாட்டில் உள்ள வில்லன், ஒரு காட்சியில் தனக்கு பணம் தர வேண்டும் என ஐதராபாத்தில் ஒரு பெரும் புள்ளியை மிரட்டுவதற்காக போன் செய்வார்.
வீட்டில் அவரின் வேலைக்காரி அந்த போன் காலை எடுப்பார். இது தான் ஸ்யாமலா நடித்த பாத்திரம். வில்லன் மிடுக்குடன் மிரட்டலாக பேச, வேலைக்காரியாக நடித்த ஸ்யாமலா, எதிர்புறம் பேசுவது பெரிய டான் எனத் தெரியாமல் பல எதிர்கேள்விகளை அடுக்கிக்கொண்டே போவார். ஒரு கட்டத்தில் வில்லன் கடுப்பாகி, தன் மீது யாருக்கும் பயம் இல்லை என உணர்ந்து, அந்த பெரும் புள்ளியையும், வேலைக்காரியையும், ஆள் அனுப்பி கொல்ல சொல்வார்.
பெரும் புள்ளி சுட்டுக்கொல்லப்பட, வேலைக்காரி ஸ்யாமளா தப்பித்துக்கொள்வார். நாயகன் கோபிசந்த் கொலை நடந்த வீட்டுக்கு வந்து, விசாரிக்க, தான் போனில் பேசிய விஷயத்தை ஸ்யாமளா கூற, "உன்னால தான் உன் முதலாளி செத்துட்டான்" என கூறுவார். இந்த சீன் பின்னாட்களில் சமூக ஊடகங்களில் அதிகம் உலா வந்த ஒன்று. அவரின் தற்போதைய மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.