மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயிலிருந்து மீண்ட அவருக்கு, கடந்த ஒன்றரை மாதங்களாக நோய் மீண்டும் தீவிரமடைந்தது.
மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து அவர் நேற்று காலமானார்.
அவருக்குக் கல்யாணி என்ற மனைவியும், விக்ரமாதித்யா என்ற மகனும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை மும்பையில் நடைபெறவுள்ளது.
பி.ஆர்.சோப்ராவின் புகழ்பெற்ற 'மகாபாரதம்' தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
இந்தியில் அமீர் கான் நடித்த 'லகான்' மூலம் பிரபலமான பிரதீப் ராவத் தமிழில் சூர்யாவின் கஜினியில் இரட்டை வேடத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். அமீர் கான் நடிப்பில் அதன் இந்தி ரீமேக்கிலும் அவர் வில்லன் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் வில்லன் வேடங்களில் அவர் நடித்திருக்கிறார். தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தில் ஒரு போர்ஷனில் அவர் தோன்றியிருப்பார்.
இந்தி, தெலுங்கு, தமிழ் தவிர கன்னடம், மலையாளம், போஜ்புரி மற்றும் நேபாளி மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
பிரதீப் ராவத்தின் மறைவுக்கு இந்தியா முழுவதும் உள்ள பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.