"சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை" முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நேற்று 'Start Run, Stop Drugs' என்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக முதலமைச்சர் விஜய் நேரடியாகக் களமிறங்கி, பொதுமக்களுடனும் இளைஞர்களுடனும் இணைந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஓடினார்.
முதலமைச்சரின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது இந்த ஆரோக்கியமான முயற்சி குறித்து பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
"50 வயதைக் கடந்தும் ஒரு முதல்வர் ஓடுவது பாசிட்டிவ் சிக்னல்"..
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வரும் ஜூலை 3-ஆம் தேதி வெளியாகவுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
'நேற்று காலையில் முதலமைச்சர் விஜய் சார் மாரத்தானில் 3 கிலோமீட்டர் தூரம் வரை ஓடிய வீடியோவை பார்த்தேன். அதை பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ரொம்ப பாசிட்டிவாகவும் இருந்தது.
பொதுவாக ஒரு முதலமைச்சர் என்றால் கொடியசைத்து மட்டும் தான் தொடங்கி வைப்பார்கள். ஆனால், ஒரு மாநிலத்தின் சிஎம், 50 வயதைக் கடந்த நிலையிலும், தன்னுடைய உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, மக்களுடன் களத்தில் இறங்கி 3 கி.மீ ஓடுகிறார் என்றால் அது சமூகத்திற்கு ஒரு நல்ல 'சிக்னல்'. 'Say No to Drugs' என்ற விழிப்புணர்வை அவரே முன்னின்று கொடுப்பது இளைஞர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு". மேலும் மக்கள் அனைவரும் சேர்ந்துதான் அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளோம், எனவே இந்த ஆட்சியில் இன்னும் பல நல்ல பாசிட்டிவான விஷயங்கள் நடக்கும் என்று நம்புவதாக கூறினார்.
சினிமா துறையில் மாற்றங்கள் வரும்!
அரசியல் தனக்குத் தெரியாது என்றும், கடந்த ஐந்து வருடங்களாகத்தான் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்ட விஷ்ணு விஷால், புதிய முதலமைச்சரின் வருகையால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், வரும் காலங்களில் சினிமா துறையில் இன்னும் பல நல்ல மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
மாரத்தான் ஓட்டம்..
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இருந்து தீவுத்திடல் வரை இந்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை முதலமைச்சர் விஜய் முன்னின்று வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில், முதலமைச்சர் விஜயுடன் இணைந்து அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, பி. வெங்கடரமணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
இவர்களுடன் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும், இளம் தலைமுறையினரும் மிகுந்த உற்சாகத்துடன் ஓடினர்.