பாலிவுட் முன்னணி இளம் நடிகர் டைகர் ஷெராஃப் பயணித்த கார் மீது, மும்பை ஜுஹு பகுதியில் மர்ம நபர்கள் 7 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த கொடூரத் தாக்குதலுக்கு சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் உடனடியாகப் பொறுப்பேற்றுள்ளதுடன், நடிகர் சல்மான் கானுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு இதுவே இறுதி எச்சரிக்கை என்றும் மிரட்டியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஜுஹு பகுதியில் டைகர் ஷெராஃப்பின் கார் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் காரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
காரின் முன் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளைக் குறிவைத்து மொத்தம் 7 ரவுண்டுகள் சுடப்பட்டன. இதில் 5 தோட்டாக்கள் காரில் பாய்ந்தன.
துப்பாக்கிச் சூட்டின் போது ஒரு சதிகாரன் காரின் மிக அருகில் வந்து டைகர் ஷெராஃப்பை சுட முயன்றான். ஆனால், நல்ல வேளையாக அவனது பிஸ்டல் துப்பாக்கி ஜாம் ஆனதால் நடிகர் நூலிழையில் உயிர் தப்பினார்.
எனினும், இந்தத் தாக்குதலில் டைகர் ஷெராஃப்பின் ஓட்டுநர் ஃபிர்தோஸ் இப்ராஹிம் பலோச் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக டைகர் ஷெராஃப் தானே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, காரை வேகமாக ஓட்டிச் சென்று ஓட்டுநரை மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதித்தார்.
தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் ஆடியோ பதிவு ஒன்று வெளியானது. அதில் அனில் பண்டிட் என்ற நபர், "நானும் எனது கூட்டாளி ஹர்மன் சந்துவும் சேர்ந்துதான் டைகர் ஷெராஃப் மீது தாக்குதல் நடத்தினோம்.
நான் லாரன்ஸ் பிஷ்னோய்யின் தம்பி போன்றவன். டைகர் ஷெராஃப்புக்கு ஏற்கனவே அறிவுரை கூறப்பட்டது, ஆனால் அவர் கேட்கவில்லை. சல்மான் கானுடன் தொடர்பில் இருக்கும் எவரும் உயிரோடு இருக்க முடியாது" என்று இந்தி மொழியில் பேசியுள்ளார்.
மேலும், 1998-ல் நடந்த மான் வேட்டை வழக்காடலுக்காக சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்திடம் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது குடும்பத்தில் உள்ள வளர்ப்பு நாய் கூட தப்பாது என்றும் அந்த ஆடியோவில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் ஒரு பிரபலத்தைத் தாக்கும் போதும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஒரே மாதிரியான ஒரு திட்டவட்டமான உத்தியைப் பயன்படுத்துகிறது.
தாக்குதல் முதலில் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு அல்லது கொலை நடத்துவது. தாக்குதல் நடத்திய சில நிமிடங்களில் சமூக வலைத்தளத்தில் வருவது. தாங்கள் தான் செய்தோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது.அடுத்த இலக்கு யார் என்று கூறி ஒட்டுமொத்த திரையுலகிற்கும் எச்சரிக்கை விடுப்பது போன்ற உத்திகளை கடைபிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சல்மான் கானுடன் நட்பாக இருக்கும் பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து பிஷ்னோய் கும்பலால் குறிவைக்கப்பட்டு வருகின்றனர்:
பிப்ரவரியில் பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் ஜுஹு இல்லத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை - அக்டோபரில் தனது நெட்பிளிக்ஸ் ஷோவில் சல்மான் கானை அழைத்ததற்காக, நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் கனடா கஃபே மீது 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டது.
அக்டோபர் 2024-ல் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏப்ரல் 2024-ல் சல்மான் கானின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பு மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
டைகர் ஷெராஃப்பின் தந்தை ஜாக்கி ஷெராஃப் சல்மான் கானுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும், சல்மான் கானின் பரிந்துரையின் பேரில் தான் டைகர் ஷெராஃப் பாலிவுட்டில் அறிமுகமானார் என்ற திரைத்துறை பின்னணியின் காரணமாகவே தற்போது டைகர் ஷெராஃப் குறிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தால் மும்பை திரையுலகினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.