சினிமா செய்திகள்

'கருப்பு' படத்தின் பின்னணி: ஆர்ஜே பாலாஜி ஓபன் டாக்!

"இவ்வளவு பெரிய அன்பிற்கும், என் திரைப்பயணத்தின் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கும் சூர்யா சார் மட்டுமே காரணம்."

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'கருப்பு'. இந்தத் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் மற்றும் தமிழக முதல்வருமான விஜய்யை ஆர்ஜே பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதன்பின், விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, "கருப்பு திரைப்படம் சாத்தியமாவதற்குக் காரணமானவர் விஜய் சார் தான்" என்று ஆர்ஜே பாலாஜி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. படத்தில் நடித்த சூர்யாவிற்கு முறையான அங்கீகாரமும் நன்றியும் தராமல், விஜய்க்கு ஆர்ஜே பாலாஜி அதிக முக்கியத்துவம் தருகிறார் என்று சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர் விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்த விமர்சனங்களுக்கு அண்மையில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு ஒன்றில் ஆர்ஜே பாலாஜி விரிவான விளக்கம் அளித்துள்ளார். அதில்,

'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்திற்குப் பிறகு விஜய்க்காக ஒரு பிரம்மாண்ட கதையை ஆர்ஜே பாலாஜி தயார் செய்துள்ளார். ஆனால், இருவரின் கால்ஷீட் மற்றும் நேரமின்மை காரணமாக அந்தப் படம் தள்ளிப்போனது. இருப்பினும், அந்தச் சந்திப்பு தான் அடுத்தடுத்த கதைகளுக்கான தொடக்கமாக அமைந்தது.

விஜய்க்கு ஆர்ஜே பாலாஜி கதை சொன்ன விஷயம் தெரிந்து தான், 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பாளர்கள் அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர். "விஜய் சாருக்குச் சொன்ன அதே கதையை எங்களுக்கும் சொல்ல முடியுமா?" என்று கேட்டுள்ளனர். அதன் மூலமாகவே சூர்யாவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு ஆர்ஜே பாலாஜிக்குக் கிடைத்துள்ளது.

நெட்டிசன்களின் விமர்சனத்திற்குப் பதிலளித்த ஆர்ஜே பாலாஜி, "விஜய் சாருடன் நான் படம் பண்ணவில்லை, சூர்யா சார் தான் இந்தப் படத்தை உருவாக்கினார். இன்று என் வாழ்க்கையில் எனக்குக் கிடைக்கும் இவ்வளவு பெரிய அன்பிற்கும், என் திரைப்பயணத்தின் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கும் சூர்யா சார் மட்டுமே காரணம். ஆனால், அதற்கான முதல் கதவு திறக்கக் காரணமாக இருந்தவர் விஜய் சார் தான். அதனால்தான் மனதார அவருக்கு நன்றி கூறச் சென்றேன்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

'கருப்பு' படத்தின் பூஜை மாசாணியம்மன் கோயிலில் தொடங்கியதால், படம் வெற்றியடைந்த பின் விஜய்யைச் சந்தித்து நன்றி கூறினால் மட்டுமே அந்த வட்டம் முழுமையடையும் என்று தான் கருதியதாகவும், இந்தச் சந்திப்பின் போது விஜய் கதையைப் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.