இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர், தனது நடிப்புடன் கவர்ச்சி நடனங்களாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கும் 'புருஷன்' திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர இந்தியில் 5 புதிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
'மில்க்கி பியூட்டி' என ரசிகர்களால் அழைக்கப்படும் தமன்னா, ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இருப்பினும், தான் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு நடனப் பாடலையும் வெறும் நடனமாகப் பார்க்காமல், அதையும் ஒரு கதாபாத்திரமாகவே கருதி அர்ப்பணிப்புடன் நடிப்பதாகத் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்தியில் வெளியான 'ஸ்த்ரீ 2' படத்தின் 'ஆஜ் கி ராத்' பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் தமன்னாவின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது.
திரைப்படங்களில் சவால் நிறைந்த மற்றும் நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கத் தான் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக தமன்னா தெரிவித்துள்ளார். ஆனால் பெரும்பாலான இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தன்னை நடனப் பாடல்களுக்கு மட்டுமே அணுகுவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்படும் பிம்பத்தைத் தாண்டி, தனது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய வலுவான கதாபாத்திரங்கள் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஒரு கவர்ச்சியான பிம்பத்தைத் தாண்டி, ஒரு நடிகையாக தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களை இயக்குநர்கள் வழங்க வேண்டும். சினிமா காலத்திற்கேற்ப தொடர்ந்து மாறி வருவதாக குறிப்பிட்ட அவர், கதையின் தேவைக்கேற்ப முத்தக் காட்சிகள் இடம்பெற்றால் அவற்றை மட்டும் தனியாக பிரித்துப் பார்க்கவோ அல்லது தவறாக மதிப்பிடவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளார். தமன்னாவின் இந்தக் கருத்துகள் தற்போது திரையுலகில் கவனம் பெற்றுள்ளன.