சினிமா செய்திகள்

ஸ்பெஷல் மென்சன் ‘கிளிக்சன்’: ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவை பாராட்டிய முதல்வர் வி. டி. சதீசன்!

பொதுவாக ஒரு படத்தைப் பார்த்த பிறகு பாராட்டுக்குறிப்பு எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால்...,

ஏ.டி. கிரிஷ் இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி மலையாளம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.

எதார்த்தமான, நகைச்சுவையோடு கலந்து காதலை அழகாக காட்சிப்படுத்தியிருந்த இப்படம், மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் ரசிகர்கள் பட்டாளத்தில் கேரளம் முதலமைச்சர் வி.டி.சதீசனும் இணைந்துள்ளார்.

இப்படத்தை பாராட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“மாதத்திற்கு ஒரு படமாவது பார்க்கும் பழக்கம் இருந்தது, ஆனால் வேலைப்பளு காரணமாக அது தடைபட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நேற்று ஒரே அமர்வில் ஒரு முழுப் படத்தைப் பார்த்தேன்.

என் மகளுடனும், அவளது தோழியுடனும் இணைந்து, ‘பெத்லகேம்’ குடும்பச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தைப் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

இந்தப் படத்தின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது; எந்தவிதமான ஆபாசமும் இல்லை. இது என்னுள் இருந்த இளமைக்கால நினைவுகளை உடனடியாகத் தட்டி எழுப்பியது.

அன்று நாங்கள் பார்த்த கிராமப்புறச் சூழல், அங்குள்ள மக்கள், அவர்களின் எளிய வாழ்க்கை, அவர்களுக்கு இடையிலான அன்பு, இதமான காதல் என அனைத்தையும் இந்தப் படம் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது. ஏன் இவ்வளவு தாமதமாக இந்தப் படத்தைப் பார்த்தோம் என்று தோன்றியது.

நாயகன், நாயகி என்று சொல்லப்படுபவர்கள் மட்டுமல்லாமல், ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்து சென்றவர்கள் கூடத் தங்கள் முத்திரையைப் பதித்தனர். படம் என்னைப் பலமுறை சிரிக்க வைத்தது, சில தருணங்களில் நெகிழவும் வைத்தது. ஒட்டுமொத்தமாக, இந்தப் படத்தைப் பார்த்த நேரம் மிகவும் இனிமையாக அமைந்தது. இது ஒரு சிறந்த குழுப்பணியின் வெளிப்பாடு.

பொதுவாக ஒரு படத்தைப் பார்த்த பிறகு பாராட்டுக்குறிப்பு எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால், இந்தப் படம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளித்ததால், இதைப் பற்றி எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இயக்குநர் ஏ.டி. கிரிஷ் மற்றும் நடிகர் சங்கீத் பிரதாப் ஆகியோரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு ஆகியோரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களுடன் சேர்த்து, கிளிக்சனின் பெயரும் என் நினைவுக்கு வந்தது. பாவம் கிளிக்சன்!

இந்தப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT