‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா 'போதி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்தது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமாக ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.
மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜெயிலர் 2 திரைப்படம் ரூ.350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி ஜெயிலர் 2 உலகளவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில்,ஜெயிலர் 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘அல்ல போலேலோ’ சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியிருந்தார் ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் ‘காவாலா’ பாடலைப் போல ‘அல்ல போலேலோ’ பாடலும் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்று வைரலானது.
ஜெயிலர் 2 ஃபர்ஸ்ட் சிங்கிளை தொடர்ந்து படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் 2 திரைப்படத்தில் போதி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
முன்னதாக ஜெயிலர் 2 திரைபபடத்தில் சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தில் திலீப் என்ற கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.