மோசடி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வரும் நாயகன் அயான், தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை தேடி குபேரபுரம் என்ற கிராமத்திற்கு செல்கிறார். தங்க சுரங்கத்தை நம்பி வாழும் அந்த கிராமத்தில், ஒரு மர்மமான சம்பவத்திற்குப் பிறகு மக்கள் அனைவரும் சாதாரணமாக பேசாமல் பாடலாகவே பேச தொடங்குகிறார்கள்.
அதை குபேர கடவுளின் சாபம் என்று நம்பும் அந்த ஊர் மக்கள், அந்த சாபத்தில் இருந்து மீண்டார்களா? பணத்தை வாங்கிவிட்டு அங்கிருந்து தப்பிக்க நினைத்த அயானின் திட்டம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அயான், கலகலப்பான இளைஞராகவும், சென்டிமெண்ட் காட்சிகளிலும் இயல்பாக நடித்திருக்கிறார். இயற்கையை பாதுகாக்க போராடும் கதாபாத்திரத்தில் வரும் அஹல்யா பம்ரூ தனது துறுதுறுப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
நிவேதா பெத்துராஜ், ஷாலினி கொண்டேபூடி, ராகுல் ரவீந்திரன் உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் விஜய் தேவரகொண்டாவும் மனதில் பதிகிறார்.
மனிதர்களின் பேராசை, இயற்கை வளங்களின் அழிவு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் போன்ற கருத்துகளை ஃபேண்டஸி பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். படம் முழுவதும் அனைவரும் பாடலாக பேசுவது ஆரம்பத்தில் வித்தியாசமாக தோன்றினாலும், போகப் போக அதுவே கதையுடன் ஒன்றி விடுகிறது. எந்த இடத்திலும் சலிப்பு வராமல் அந்த முயற்சியை திரையில் கொண்டு வந்திருப்பது இயக்குநரின் வெற்றி.
சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், புதுமையான கற்பனை, இசை, காட்சியமைப்பு ஆகியவை அந்த குறையை மறைத்து விடுகின்றன. 80 வயதைக் கடந்தும் புதிய முயற்சியில் களமிறங்கி, வித்தியாசமான திரை அனுபவத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் பாராட்டுக்குரியவர்.
ஒளிப்பதிவாளர் அங்கூர் சி., வறண்ட நிலப்பரப்பு, தங்க சுரங்கம், குபேரபுரம் கிராமம் என அனைத்தையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை இந்த படத்தின் மிகப்பெரிய பலம். உரையாடல்களையே பாடல்களாக மாற்றியிருக்கும் முயற்சியை தனது இசையால் சுவாரஸ்யமாக மாற்றியிருக்கிறார். பின்னணி இசையும் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.