சினிமா செய்திகள்

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ஆர்.பி.சௌத்ரி உடல் - நடிகர்கள் அஞ்சலி!

நடிகர் ஜீவாவின் தந்தையும், பிரபல தயாரிப்பாளுமான ஆர்.பி. சௌத்ரியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனருமான ஆர்.பி. சௌத்ரி நேற்று ராஜஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார்.

நடிகர் ஜீவாவின் தந்தையான இவர், நேற்று தனது சொந்த ஊரான உதய்பூருக்கு சென்றநிலையில் விபத்து ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

அவரது இந்த மறைவு திரைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சௌத்ரியின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நடிகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.