டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலிக்கிறார். இருவரின் காதலும் திருமணத்தில் முடிகிறது. இதற்கிடையே சங்கமித்ரனுக்கு குடிப்பழக்கம் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவர, அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. அதன்பிறகு கணவன் - மனைவி உறவில் என்ன நடந்தது? அவர்களது வாழ்க்கை எப்படி பயணித்தது? என்பதை படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் சேகரன், காதல், ஏமாற்றம், வலி என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். குறிப்பாக நோய் பாதிப்புக்கு பிறகான காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் நதியா சோமு, ஆரம்பத்தில் சாதாரண காதல் நாயகியாக வந்தாலும், பிற்பாதியில் உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் அருண்குமார் சேகரன், குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளையும், அவசர முடிவுகளின் விளைவுகளையும் சொல்ல முயற்சித்திருக்கிறார். அவர் சொல்ல வந்த கருத்து சரியாக இருந்தாலும், திரைக்கதையில் சில இடங்களில் தெளிவின்மை இருப்பது படத்தின் பலவீனமாக மாறுகிறது.
குறிப்பாக சில முக்கியமான கேள்விகளுக்கு பதில் இல்லாமல் போவது ஏமாற்றம் அளிக்கிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
வினோத் குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையான யதார்த்தத்தை கொடுத்திருக்கிறது.
சரவண தீபனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருப்பதோடு, பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.