நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் 48-ஆவது திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியானது. ஹொம்பாலோ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்காலிகமாக "S48" என அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த நிலையில், S48 திரைப்படம் குறித்து ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பெருமிதமும், பெருமகிழ்ச்சியும்:
இந்த திரைப்படம் பற்றி கூறும்போது, "தமிழ்நாடு, தென்னிந்தியா கடந்து இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகராக விளங்கும் சூர்யாவை, முப்பது ஆண்டுகளுக்கு மேல் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வணிக வெற்றியையும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒருசேர பெறுவதில் தனித்து விளங்கும் சூர்யா அவர்களுடன் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைகிறது.
இந்தியா கடந்து உலக அளவில் கவனம் ஈர்த்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் அவர்கள், அழுத்தமான கதைகளத்தில் நட்சத்திர நடிகர்களை வெற்றிகரமாக கையாண்டு வெற்றிகளை தரக்கூடியவர். மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை கடந்து செல்லும் சிறந்த வெற்றி திரைப்படங்களை உருவாக்குவதில் ஹொம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அளவில் பெரும் வெற்றியையும், கவனத்தையும் பெறப்போகும் திரைப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆர்வமும் கவனமும்:
The one சூர்யா அவர்களையும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களையும் ஹொம்பாலே பிலிம்ஸ் குடும்பத்தில் இணைய மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஹொம்பாலே பிலிம்ஸ் மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு சிறந்த படங்களை தயாரிப்பதிலும், அதை மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட வெற்றியடைய செய்வதில் ஆர்வமும் கவனமும் செலுத்துகிறது.
இந்த தொலைநோக்கு சிந்தனையோடு உள்ள நடிகர்களையும், இயக்குநர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் இணைப்பதில் எப்போதும் தீவிரம் காட்டி வருகிறது. அதே தொலைநோக்கு சிந்தனை கொண்ட நட்சத்திர நடிகர் சூர்யா அவர்களோடும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களோடும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்," என தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்தார்.