இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த ஜூன் 4 அன்று வெளியான திரைப்படம் ‘பெத்தி’. ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா கதைக்களத்தில் உருவான இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஜான்வி கபூரை கவர்ச்சியாக காட்சிப்படுத்தியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த இயக்குநர் புச்சி பாபு சனா, பெண்களை அவமதிக்கும் நோக்கத்தில் எந்தக் காட்சியும் வைக்கப்படவில்லை என விளக்கம் அளித்ததுடன், யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்தார்.
வெங்கட சதீஷ் கிலாருவின் ரித்தி சினிமாஸ் தயாரிப்பில், இஷான் சக்சேனா மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கியுள்ளது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'பெத்தி' திரைப்படம், இதுவரை உலகளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ‘பெத்தி’ திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ‘பெத்தி’ திரைப்படம் வருகிற 9-ந்தேதி முதல் பிரபல ஓ.டி.டி. தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் மற்றும் மீண்டும் பார்க்கக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.