கிஷோர்  
சினிமா செய்திகள்

கோழைகள்.. அமைச்சரை மாற்றுவதால் எதுவும் மாறாது, அரசியல் மாற்றமே தீர்வு - இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு நடிகர் கிஷோர் கண்டனம்

இந்த கொடூரம், பிரதமர் மோடி தான் ஒரு 'மனிதப் பிறவி அல்ல' என்று கூறியதை நிரூபிக்கும் வகையில் உள்ளது.

நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் இளைஞர்கள் கடந்த ஜூன் 20 போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 20 அன்று பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்ற இளைஞர்கள் மீது போலீசார் மற்றும் மத்திய படையினர் கடுமையான தாக்குதல் நடத்தினர்.

தடிகளால் அடித்தும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் காவல்துறையினர் இளைஞர்களை தாக்கியது பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களை குவித்து வருகிறது. மேலும் டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் நேற்று பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் பெங்களூரில் நடந்த போராட்டத்தில் நடிகர் ஆடுகளம் கிஷோர் கலந்துகொண்டார்.

இதனிடையே வீடியோ ஒன்றை வெளியிட்டு டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர் அதில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

வீரர்கள் Vs கோழைகள்

வீடியோவில் அவர் கூறியதாவது, "அன்பு, அமைதி, ஒற்றுமை மற்றும் அகிம்சையை வலியுறுத்தும் எனதருமை இளைஞர் படைக்கு வீரவணக்கம்.

திருப்பித் தாக்காமல், அடி வாங்குவதற்குக் கூட மிகப்பெரிய தைரியம் வேண்டும். உங்களை விட வீரம்மிக்க படை எதுவுமே இருக்க முடியாது.

உங்களை அடிக்கும் காவல்துறையினரும், ஆர்எஸ்எஸ் குண்டர்களும் கோழைகள். வன்முறையைக் கையிலெடுப்பவர்கள் மட்டுமே கோழைகளாக இருக்க முடியும்.

மோடி மனிதப் பிறவி அல்ல

சிறு குழந்தைகள் மீது அவர்கள் காட்டிய இந்த கொடூரம், பிரதமர் மோடி தான் ஒரு 'மனிதப் பிறவி அல்ல' என்று கூறியதை நிரூபிக்கும் வகையில் உள்ளது. சிறிதளவாவது மனிதநேயம் கொண்ட எவரும் குழந்தைகள் மீது இப்படி ஒரு கொடூரத் தாக்குதலுக்கு உத்தரவிட மாட்டார்கள்." எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய கிஷோர், "காந்தி படுகொலை, கோத்ரா கலவரம் முதல் கௌரி லங்கேஷ் படுகொலை வரை வன்முறையையும் வெறுப்பையும் வரலாறாகக் கொண்ட இந்த அரசிடமிருந்து நாம் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.

தேசத்துரோகிகள்

இதுபோதாதென்று, தங்களின் 'கோடி மீடியாக்கள்' , ஐடி செல்கள் மற்றும் அந்த்பக்த்-களை பயன்படுத்திபிஞ்சுக் குழந்தைகளையும் 'தேசத்துரோகிகள்' என்று சித்தரித்துப் பொய்களைப் பரப்புகிறார்கள்.

இந்த அரசில் இருப்பவர்கள் யாரும் தங்களது தவறுகளை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. அரசின் தோல்வியால் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறக்கூடப் பிரதமர் மோடிக்கு நேரமில்லை. ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரும்பு முள்கள் பொறித்த லத்திகளுடன் ஆட்களை ஏவிப் பிஞ்சுக் குழந்தைகளை அடிக்க வைக்கிறார்.

அரசியல் மாற்றம்

ஒரே ஒரு கல்வி அமைச்சர் ராஜினாமா செய்வதால் மட்டும் நமது கல்வி முறை மாறிவிடாது. இந்த முழு அமைப்பும் ஊழல் நிறைந்ததாகவும், பொறுப்பற்றதாகவும் உள்ளது. ஒரு அரசியல் மாற்றம் மட்டுமே ஒட்டுமொத்த அமைப்பையும் மாற்ற முடியும்.

எனவே, இந்தப்போராட்டத்தை நாம் தேர்தல் வரை கொண்டு செல்ல வேண்டும். சாதிகள், மதங்களின் பெயரால் வாக்களிக்காமல், இந்த அரசியலவாதிகளின் ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் வாக்குகள் மூலம் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.